- பாரிஸ்
- பாராலிம்பிக் விளையாட்டுக்கள்
- கோடை ஒலிம்பிக்ஸ்
- பாராலிம்பிக் விளையாட்டுகள்
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டி
- பாராலிம்பிக்
- தின மலர்
பாரிஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கயுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டி முடிந்ததும், அதே நகரில், அதே அரங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 24ல் தொடங்கி இம்மாதம் 12ம் தேதியுடன் நிறவடைந்த நிலையில், பாராலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. கன்கார்ட் சதுக்கம் முன்பாக நடந்த விழாவில் பாராலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, போட்டி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின.
தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய குழுவினருக்கு தடகள வீரர் சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), வீராங்கனை பாக்யஸ்ரீ யாதவ் (குண்டு எறிதல்) இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தனர். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 169 நாடுகளைச் சேர்ந்த 4464 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து வில்வித்தை (3 வீரர் + 3 வீராங்கனை), தடகளம் (28+10), பேட்மின்டன் (7+6), சைக்கிளிங் (1+1), ஜூடோ (1+1), பாரா படகோட்டுதல் (1+2), வலுதூக்குதல் (2+2), துடுப்பு படகோட்டம் (1+1), துப்பாக்கி சுடுதல் (7+3), நீச்சல் (1+0), டேபிள் டென்னிஸ் (0+2), டேக்வாண்டோ (0+1) என 12 வகையான போட்டிகளில 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் என மொத்தம் 84 பேர் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். தடகள போட்டிகள் நாளை தொடங்குகின்றன. 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா, இம்முறை குறைந்தபட்சம் 25 பதக்கங்களையாவது வெல்லும் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் தங்கங்கள்
* தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேல் (சேலம்) உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் பங்கேற்கிறார். இவர் ஏற்கனவே 2016 ரியோவில் தங்கமும், 2020 டோக்கியோவில் வெள்ளியும் வென்றுள்ளார்.
* துளசிமதி முருகேசன் (காஞ்சிபுரம்) பேட்மின்டன் ஒற்றையர் (எஸ்யு5) பிரிவில் விளையாட உள்ளார்.
* சிவராஜன் சோலைமலை (மதுரை) முதல் முறையாக பாரலிம்பிக் பேட்மின்டன் (எஸ்எச்6) ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் களம் காண உள்ளார். இவர் பங்கேற்கும் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்கும்.
* தமிழகத்தின் மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்) பேட்மின்டன் (எஸ்யு5) பிரிவில் களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியவர்.
* நித்யஸ்ரீசுமதி சிவன் (சென்னை) எஸ்எச்8 பிரிவு பேட்மின்டன் போட்டியில் பங்கேற்கிறார்.
* கஸ்தூரி ராஜாமணி (சென்னை) 67 கிலோ எடை பிரிவு வலுதூக்குல் போட்டியில் அசத்த காத்திருக்கிறார்.
The post பாராலிம்பிக் கோலாகல தொடக்கம்: களைகட்டியது பாரிஸ் appeared first on Dinakaran.