×

குளச்சலில் நள்ளிரவு பரபரப்பு: இடைவிடாது ஒலித்த வங்கி அலாரம்

குளச்சல்: குளச்சல் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வருகிறது ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி கிளை. நேற்று செவ்வாய்கிழமை மாலை ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவு வேளையில் திடீரென வங்கியின் எச்சரிக்கை அலாரம் இடைவிடாது ஒலித்துக்கொண்டு இருந்தது. இதனால் பீதி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்களையும் வரவழைத்தனர். வங்கியில் கொள்ளை முயற்சிகள் ஏதாவது நடந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் வங்கி வளாகத்தை சுற்றிலும் சோதனை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்த போது வங்கிக்குள் இருந்து மின்சாதன பொருள் எரிந்த நாற்றம் வந்தது. ஆகவே வங்கிக்குள் ஏதேனும் பொருட்கள் தீப்பற்றி எரிகிறதா? என்று சந்தேகம் அடைந்த வீரர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்து விட்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டு உள்ளதா? என்று சோதனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நடத்திய சோதனையில் எச்சரிக்கை அலாரத்தின் கண்ட்ரோல் பேனலில் இருந்து தீஞ்ச நாற்றம் வந்து உள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த வங்கி எலெக்ட்ரிசியன் ஆய்வு மேற்கொண்டதில் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் ஏற்பட்ட மின் கசிவால் எச்சரிக்கை அலாரம் தொடர்ந்து ஒலித்தது தெரியவந்தது. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அலாரம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் அங்கிருந்து நிம்மதியுடன் திரும்பி சென்றனர். கரப்பான் பூச்சியால் வங்கி அலாரம் இடை விடாது ஒலித்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post குளச்சலில் நள்ளிரவு பரபரப்பு: இடைவிடாது ஒலித்த வங்கி அலாரம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,State Bank of India ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே பைக்குகள் மோதல்: 2 வாலிபர்கள் படுகாயம்