விராலிமலை, ஆக.28: விராலிமலை அருகே தமிழக அரசின் முத்தான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர் இதில், ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைத்திட, மக்களுடன் முதல்வர் திட்டம் நகர் பகுதிகளை தொடர்ந்து ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறைகளை பல்வேறு தேவைகளுக்காக அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை நகர்ப்புறங்களில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 14 துறைகளில் உள்ள 44 வகையான சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அளித்து மக்கள் நிவாரணம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி ஊராட்சியில் ராஜாளி பட்டி,விருதாபட்டி,வானத்திரயான்பட்டி,மேப்பூதகுடி, நம்பம்பட்டி ஆகிய 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மக்களுடன் முதல்வர் முகாம் நம்பம்பட்டியில் நடைபெற்றது.
இதில், வருவாய்த்துறை, மின்சார வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவ துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, காவல் துறை, வேலைவாய்ப்பு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல அலுவலக துறை, வேளாண்மை பொறியியல் துறை, வட்ட சட்டப் பணிகள், தொழிலாளர் நலத்துறை (அமைப்பு சாரா) உள்ளிட்ட துறைகளுக்கு 54 (எம்எம்சி), 89 (எம்எம்) என மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டு ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட நிலையில் மற்ற மனுக்கள் துறை சார்ந்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஏற்பாடுகளை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், சுப்பிரமணியன்(கிஊ), தலைமையிலான வருவாய்த்துறை, ஊராட்சித்துறையினர் செய்திருந்தனர்.
The post விராலிமலை அருகே நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 143 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.