×

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு அறச்செயல்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில்

திருவண்ணாமலை, ஆக.28: திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், சி.பழனிசாமி உள்ளிட்டோர் தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, தச்சம்பட்டு முருகர் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தச்சம்பட்டு கிராமத்தில் கண்ெடடுத்த கல்வெட்டுகளில் குறுநில தலைவன் என்று கருதப்படுகிற ஆண், பெண் உள்ள சிற்பம் உள்ளது. மேலும், கல்வெட்டில் மணலூர்பேட்டையில் இருக்கும் கெங்கை கோத்திறம் என்று உள்ளது. அருகில் உள்ள பலகைக் கல்வெட்டில், கிருஷ்ணப்ப நாயக்கர் மனைவி சூப்பச்சியம்மனுக்காக பச்சையம்மாள் மகன் முனியகண்ணன் குளமும் தர்ம சத்திரமும் கட்டியதாக குறிப்பிடுகிறது. இந்த 2 கல்வெட்டுகளும் சுமார் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

சாலையின் அருகில் உள்ள ஆங்கில கல்வெட்டில், ஆங்கிலேயேர் கால கலெக்டரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் நாப்புதுரை விடுதி என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாப்புதுரை என்பவர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியர் (1909-1910) என்பதும், இங்கிலாந்தில் உல்ஸ்டனில் 1870ல் பிறந்தவர் என்பதும் ெதரிகிறது. இவர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து, வருவாய்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். மெட்ராஸ் எம்.எல்.சியாக இருந்துள்ளார். கடந்த 1954ல் இறந்துள்ளார். இவர் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வகுத்துள்ளார்.

அதனால், அவரை இங்கு போற்றும்விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை வழியாக செல்லும் பயணிகளின் நலனுக்காக, தங்குமிடத்தை கட்டியுள்ளார். வன விலங்குகள் தங்கவும் இடவசதி செய்துள்ளார். அதேபோல், திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலக சுற்றுச்சுவரிலும், இதுபோன்ற கல்வெட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையை நாப்புசாலை என்று 1909ல் அழைத்துள்ளனர். தச்சம்பட்டு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, குளம் வெட்டி, தர்மசத்திரம் கட்டி மக்கள் பணி செய்த ஊர் தலைவன் குறித்தும், 100 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பணிகளை செய்துள்ள ஆங்கிலேய கலெக்டர் தொடர்பான கல்வெட்டும் கிடைத்திருப்பது அந்த காலத்தின் அறச்செயல்களுக்கு சான்றாக அமைந்திருக்கிறது.

The post 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு அறச்செயல்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Thachampattu village ,Thiruvannamalai ,Thiruvannamalai District Historical Research Center ,S. Balamurugan ,C. Palanisamy ,Tandarampattu ,Thachampattu Murugar Temple ,
× RELATED திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்