×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது

தாம்பரம்: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பவ செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சஜித் மீது ஆந்திராவில் ரவுடி சீசிங் ராஜாவுடன் சென்று இரட்டை கொலை செய்த வழக்கு, திண்டிவனம் அருகே பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கு, பிரபல ரவுடியும், பாஜ பட்டியல் அணி மாநில செயலாளருமான நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு, தாம்பரத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு, சேலையூரில் ஒரு கொலை முயற்சி வழக்கு, தேனாம்பேட்டையில் கொள்ளை வழக்கு மற்றும் 2 ஆயுத வழக்கு உள்பட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

அதுமட்டுமின்றி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு, செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு என பல முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கஞ்சா, போதை மாத்திரை விற்பனை போன்றவற்றிலும் சஜித் ஈடுபட்டு வந்ததாகவும், அவருக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரவுடி சஜித் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சஜித் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Tags : Seesing Raja ,Armstrong ,Tambaram ,Bahujan Samaj Party ,president ,Seesingh Raja ,Sambhava Senthil.… ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்