காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அபாய நிலையை எட்டியுள்ளது. இந்த பருவ மழையால் இதுவரை 99 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை வரை மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மாநிலத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 7 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பராஜ் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தேசிய நெடுஞ்சாலை 56ல் உள்ள பாலம் சேதமடைந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வதோதரா, ஆனந்த், கேடா மற்றும் பஞ்சமஹால் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதுகுறித்து குஜராத் பேரிடர் நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே கூறுகையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் இறந்துள்ளனர்; இந்த பருவமழையால் இதுவரை மொத்தம் 99 பேர் இறந்துள்ளனர்.
13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், அனைத்து கலெக்டர்களும் தங்கள் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் குழு மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் இதுவரை 1,653 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 17,800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 13 தேசிய பேரிடர் குழுவும், 22 மாநில பேரிடர் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், 33 மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நவ்சாரி மாவட்டத்தின் கேர் கிராமத்தில் 356 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. குஜராத்தில் இந்த ஆண்டு 91.88 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள 206 நீர்த்தேக்கங்களில் 59 நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 72 நீர்த்தேக்கங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்பது நீர்த்தேக்கங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மழை காரணமாக குஜராத் முழுவதும் 7,009 கிராமங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
The post ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அபாய கட்டத்தை எட்டியது; குஜராத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்த பருவமழையால் இதுவரை 99 பேர் பலி appeared first on Dinakaran.