×

இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை : துரை வைகோ

சென்னை : தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலுக்கு எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ஒரு விசைப்படகையும் அதில் பயணித்த 8 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாகப்பட்டினத்தை சேர்ந்த 11 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடல் படையினர் கைது செய்து உள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருவது கண்டனத்துக்குரியது.

இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட்-24 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழ்நாட்டு மீனவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை 324 மீனவர்கள் 44 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களையும், மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதையும் படகுகளை பறிமுதல் செய்வதையும் கண்டும் காணாமல் இந்திய அரசு அலட்சியப் போக்குடன் இருப்பதை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் மாநிலங்களவையில் எடுத்துரைத்தார். அண்மைக்காலமாக நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் இலங்கை சிறையில் அடைக்கப்படும் கொடுமையும் அதிகரித்திருப்பதை நாடாளுமன்றத்தில் பேசும்போது நானும் இந்திய அரசின் பாராமுகத்தை கண்டனம் செய்தேன். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை : துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Durai Wiko ,Chennai ,Durai Waiko ,Tamil Nadu ,Duri Vigo ,Bengal Sea ,
× RELATED இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்...