×

வேலூர் விஐடியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொள்கை பிடிப்பால் இந்தியாவே போற்றும் தலைவரானார் கலைஞர்: அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

வேலூர்: வைராக்கியம், கொள்கை பிடிப்பால் இந்தியாவே போற்றக்கூடிய தலைவராக கலைஞர் திகழ்ந்திருக்கிறார் என்று விஐடியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். தமிழியக்கம், விஐடி பல்கலைக் கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் விஐடி வேலூர், இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வேலூர் விஐடியில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். தமிழியக்கம் அமைப்பு செயலாளர் வணங்காமுடி வரவேற்றார். மாநில செயலாளர் சுகுமார் நோக்கவுரை வழங்கினார்.

பொதுசெயலாளர் அப்துல்காதர் தொடக்க உரையாற்றினார். எம்பி கதிர்ஆனந்த், பொருளாளர் புலவர் பதுமனார், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலு, மேயர் சுஜாதா, விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து, முரசொலி செல்வம், அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, எம்.பி.கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 82 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி கலைஞருடன் 60ஆண்டுகள் பயணித்தவன். கலைஞர் சாதாரண மனிதன் எவ்வாறு வளர்ந்து சாதனைகளை செய்ய முடியும் என்று காட்டியவர். தன் உழைப்பால் முயற்சியால் தொல்காப்பியத்திற்கே உரை எழுதும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார். மாநிலத்திற்கு மரியாதை இருக்க வேண்டும். என்னென்ன அதிகாரம் இருக்க வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். அப்படிப்பட்ட கலைஞர் நாட்டுக்காக வாழ்ந்தவர், அந்த குடும்பம் நாட்டுக்காகவே வாழும் குடும்பம். என்றைக்கும் கலைஞர் நினைவோடு இருப்போம். அவர் பெயராலேயே ஒரு கட்டித்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்றைக்கு வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், ‘கலைஞரை போல் இன்னொருத்தவர் பிறக்க முடியாது. நாம் அரசிடம் என்ன வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். கலைஞரிடம் கோரிக்கையே வைக்க மாட்டார்கள். அவரே சிந்திப்பார் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று. அதனை நிறைவேற்றியும் காட்டுபவர் கலைஞர்’ என்றார்.

எம்பி கனிமொழி பேசுகையில், கலைஞர் எனக்கு தந்தை, நண்பராக, ஹீரோவாக இருந்தவர். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். அது ஒன்றிய அரசாக இருந்தாலும் தேவை, அவசியம், நியாயம் என்று இருக்கும் வரை கை கொடுப்போம். அதைமீறி நடந்து கொண்டால் அந்த உறவை முறித்துக்கொண்டு குரல் கொடுப்பவர் கலைஞர் தான். கொள்கையை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காதவர் என்றார்.

அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: கலைஞர் அரசியல்வாதி மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்டவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவே போற்றக்கூடிய தலைவராக வளர்ந்திருக்கிறார் என்றால், அவரது வைராக்கியம், கொள்கை பிடிப்பு அதுதான் அவரை உயர்த்தியிருக்கிறது. விஐடி வேந்தருக்கு உள்ளூர கலைஞர் மீது உள்ள பாசம் எனக்கு தெரியும். அந்த பாசத்தின் அடையாளம் இந்த விழாவை எடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
கலைஞருடன் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜாமாணிக்கம், ராஜரத்தினம், துணை மேயர் சுனில்குமார், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post வேலூர் விஐடியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொள்கை பிடிப்பால் இந்தியாவே போற்றும் தலைவரானார் கலைஞர்: அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : India ,Artist ,Vellore ,VIT ,Minister Durai Murugan Leschi ,Minister Durai Murugan ,Tamiliyakkam ,VIT University ,Pavendar Bharathidasan Tamil Literary Forum VIT ,Centenary Celebration ,Minister ,Duraimurugan Leschi ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...