×

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பால் வியாபாரி

மண்டபம்: மண்டபத்தில் வசிக்கும் பால் வியாபாரி ஒருவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், இயற்கையான பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறார். நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. சதுர்த்தி விழா முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். எனவே, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே கேட் பகுதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவர் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீர்நிலைகள், இயற்கை சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கருத்தில்கொண்டு பல்வேறு மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பசை பொடி, கஸ்தூரி மஞ்சள், பசு மாடுகளின் சாணம், ஹோமியம் ஆகியவை மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறேன். விநாயகர் சதூர்த்தி விழாவிற்குள் 500 சிலைகளை தயாரிக்க தீர்மானித்துள்ளேன். விநாயகர் சிலைகள் அதன் அளவுக்கேற்ப ரூ.100 முதல் ரூ.300 வரை விற்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பால் வியாபாரி appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Mandapam ,Vinayagar Chaturthi festival ,
× RELATED மரக்காணம் கடலில் 100 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு