- அமைச்சர் உதவிசெயலாளர்
- ஸ்டாலின்
- சர்வதேச முதமிழ் முருகன் மாநாடு
- சென்னை
- அமைச்சர்
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வள
- சர்வதேச முட்டமில் முருகன் மாநாடு
- தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை
- உதவி செயலாளர்
- தின மலர்
சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் அவர் பேசியதாவது; ‘தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நடத்தப்படுகின்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை நம்முடைய முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்கள். காணொலிக் காட்சி மூலமாக இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமை அடைகின்றேன். உலகமெங்குமிலிருந்து ஆன்மீகப் பெரியோர்கள், அடியார்கள், தமிழ் அறிஞர்கள், முருக பக்தர்கள் பங்கேற்கின்ற இந்த மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்க வாய்ப்பு தந்த அமைச்சர் அண்ணன் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணன் சேகர்பாபு அவர்களை நமது முதலமைச்சர் எப்போதுமே செயல் பாபு என்றுதான் பாராட்டி அழைப்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்க்கும் போதே புரிகின்றது.
செய்தித்தாள்களை, செய்தி சேனல்களை பார்த்தால் எப்போதுமே அண்ணன் ஏதாவது ஒரு திருக்கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான் இருப்பார். நம்முடைய முதலமைச்சர் கூறியது போல கோவிலில் தான் அவர் குடியிருப்பார் என்று சொல்கின்ற அளவிற்கு அவர்களுடைய பணி சிறந்து விளங்குகின்றது. இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் அவர்களில் வழிகாட்டுதலில் அறநிலையத்துறை அறத்தோடு தனது பணிகளை முன்னெடுத்து செல்கிறது என்றால் அதற்குக் காரணம் அண்ணன் சேகர்பாபு தான். நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலராக அண்ணன் சேகர்பாபு , செயல் பாபு மணம் வீசி கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக அரசு திடீரென்று இந்த மாநாட்டை நடத்துகிறது என்று இன்றைக்கு ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த மாநாடு திடீரென்று நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏராளமான சாதனைகளை செய்து விட்டு தான் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் . பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தான் நமது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் . இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் முதலமைச்சர் அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். திராவிட மாடல் அரசு அமைந்து, இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் 1,900க்கும் மேற்பட்ட அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து வைத்தது நமது முதலமைச்சர் . ரூபாய் 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோல் 3800 கோடி ரூபாய் மதிப்பில் 8,500 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோயில்களில் உணவு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நமது முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இன்றைக்கு நாட்டிற்கே முன்மாதிரியாக பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் 4000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது அதே போல் விரைவில் மதிய உணவு வழங்கப்படும் என்று
முதலமைச்சர் தெரிவித்துள்ளார்கள். திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணத்தை அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர் நமது முதலமைச்சர் .
அதேபோல் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மற்ற துறைகளைப் போலவே இந்து சமய அறநிலையத்துறையும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகின்றது. இப்படி அடுக்கடுக்கான சாதனைகளில் எல்லாம் செய்துவிட்டு தான் சிறப்புக்குரிய இந்த மாநாட்டினை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு ஆன்மீக மாநாடாக மட்டுமல்லாமல், பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. கழக அரசின் இந்த முயற்சிகளை எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்களாகிய நீங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆன்மீகத்தை எல்லோருக்கும் உணர்த்துகின்ற வகையில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்க போவது உறுதி. இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு எனது வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என கூறினார்.
The post அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாழ்த்துரை appeared first on Dinakaran.