- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விகுந்தம் காம்ப்ளெக்ஸ் டிக்கெட் டெஸ்டிங்
- திருப்பதியில்
- எலுமாலயன்
- கோவில்
- Tirupathur
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திற்கான வரிசையில் தமிழகத்தை சேர்ந்த 4 பக்தர்கள் நேற்று வைகுண்டம் காம்பளக்ஸ் டிக்கெட் சோதனை மையத்திற்கு வந்தனர். அப்போது டிக்கெட்டுகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் திருப்பத்தூரில் இன்டர்நெட் மையம் நடத்தி வரும் அண்ணாதுரை என்பவரிடம் டிக்கெட் வாங்கியது தெரியவந்தது. தீவிர விசாரணையில், அண்ணாதுரை தனது பாஸ்போர்ட்டில் உள்ள கடைசி எண்களை மாற்றி பதிவிட்டு மோசடியாக ஆன்லைனில் கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை பதிவுசெய்து அவற்றை அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அண்ணாதுரை மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய சில இடைத்தரகர்கள் பக்தர்களிடம் அதிகளவில் பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக விஜிலென்ஸ் போலீசாரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்காக புரோக்கர்களை நாடி பக்தர்கள் சிரமப்படவேண்டாம். பக்தர்கள் பெறும் டிக்கெட்டுகள் தரிசனத்திற்கு செல்வதற்கு முன் விஜிலென்ஸ் ஊழியர்களால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். அப்போது, தாங்கள் பெற்ற டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்தால் பக்தர்கள் தேவையில்லாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
எனவே பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ttdevasthanams.ap.gov.in மூலம் தங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் முகவரியுடன் மட்டும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இடைத்தரகர்களை நாடுவதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை இழக்கவேண்டிய நிலைவரும் என்பதால் கவனமும் இருக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 69,098 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,707 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.56 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் வாரவிடுமுறை நாளான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிறு, நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி அரசுவிடுமுறை என தொடர் விடுமுறை வருவதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வரும் 2 நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனத்தெரிகிறது.
The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி தரிசன டிக்கெட்டுகள்: தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.