×

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: இயக்குநர் நெல்சன் திட்டவட்ட மறுப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இயக்குநர் நெல்சன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

பின்பு இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்ட சூழலில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தனிப்பை காவல்துறையினர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், மோனிஷா நெல்சன் தனது வக்கீல் மூலம் விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் இன்று விசாரணை செய்து வருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குநர் நெல்சன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

காவல்துறை தரப்பில் இருந்து தமக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. தம்மிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. காவல்துறையின் எந்த அதிகாரியிடம் இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. இதுவரை என் வாழ்நாளில் காவல்துறையிடம் இருந்து போனிலோ, நேரிலோ எந்த அழைப்பும் வந்தது இல்லை. எனவே தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வதந்தியை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதாக நெல்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: இயக்குநர் நெல்சன் திட்டவட்ட மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Nelson ,Chennai ,Tamil Nadu ,president ,Bagujan Samaj Party ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...