×

காவேரி மருத்துவமனையில் முடக்குவாதவியல் துறை தொடக்கம்: வாத நோய்களுக்கு சிறப்பு கிளினிக்

சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் முடக்குவாதவியல் துறை தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட வாத நோய்களுக்காக சிறப்பு கிளினிக்கும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: சிஸ்டமிக் லூபஸ் எரிடேமடோசஸ் எனப்படும் மண்டலிய செங்கரடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட வாத நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இவை கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 10 லட்சம் நபர்களில் 5-10 நபர்கள் தோல் அழி நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பொதுவாக ஆண்களை விட பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மற்றொரு பொதுவான பாதிப்பான – எலும்புப்புரை கோளாறு, பலவீன எலும்புகளால் வகைப்படுத்தப்படும் ஒரு பாதிப்பாகும். இதுவும் கவலைக்குரிய விதத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மாதவிடாய் நின்ற பெண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதற்கான ஆபத்தில் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை தோல் அழிநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் சிறப்பு கிளினிக்குகளை கொண்ட வாதவியல் துறை தொடங்கப்பட்டுள்ளது.

இது இந்தியா முழுவதும் மேம்பட்ட, விரிவான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும். இங்கிலாந்தின் பாத் நகரிலுள்ள பிரிஸ்டல் ராயல் ஹாஸ்பிட்டல் பார் சில்ட்ரன் மற்றும் ராயல் நேஷனல் ஹாஸ்பிட்டல் பார் ருமாட்டிக் டிஸீசஸ்-ன் வாத நோய் நிபுணர் பேராசிரியர் ரமணன் இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வாத நோயியல் முதுநிலை நிபுணர் மருத்துவர் ஷாம், காவேரி குழும மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காவேரி மருத்துவமனையில் முடக்குவாதவியல் துறை தொடக்கம்: வாத நோய்களுக்கு சிறப்பு கிளினிக் appeared first on Dinakaran.

Tags : Department of Rheumatology ,Kaveri Hospital ,Diseases ,CHENNAI ,Kaveri Hospital Alwarpet ,
× RELATED கடந்த 3 நாளில் வெற்றிகரமாக 3 நுரையீரல்...