×
Saravana Stores

பாஜக மாஜி எம்பிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்.! நீதிமன்றம் கண்டித்ததால் டெல்லி போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி; பாஜக மாஜி எம்பிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்கள் இன்று கோர்ட்டில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமாக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, கடந்தாண்டு மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உட்பட பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக ஜந்தர் மந்தரில் பல நாட்களாக போராட்டம் நடந்தது. அதனால் பிரஜ் பூஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், மக்களவைத் தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு மீண்டும் சீட் வழங்க மறுத்த பாஜக, அவரது மகன் கரண் பூஷனுக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது.

இதற்கிடையே டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. மறுபுறம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், 100 கிராம் கூடுதல் எடை புகாரால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் எந்தப் பதக்கமும் பெறமுடியாமல் பாரிஸிலிருந்து நாடு திரும்பினார். இந்நிலையில் டெல்லி காவல்துறை மீது வினேஷ் போகத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில், அவர்களுக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை டெல்லி போலீசார் விலக்கிக் கொண்டதாக கூறியுள்ளார். ஆனால், வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசார் நிராகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், ‘பெண் மல்யுத்த வீராங்கனைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறுவது ெதாடர்பான எந்த உத்தரவும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு போலீசார் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்று கூறியுள்ளனர். பாலியல் புகார் கூறிய மூன்று மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் என்பவர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், மல்யுத்த வீராங்கனைகளுக்கு உடனடியாக பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்று மல்யுத்த வீராங்கனைகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ளனர். வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டும், அதற்கு டெல்லி போலீசாரின் மறுப்பும், நீதிமன்ற உத்தரவுகளும் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜக மாஜி எம்பிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்.! நீதிமன்றம் கண்டித்ததால் டெல்லி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,MAJI MP ,Delhi police ,New Delhi ,Maji ,Indian Wrestling Association ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? ராமதாஸ் விளக்கம்