×
Saravana Stores

கடற்படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அனுமதி கிடைக்காததால் கடற்கரை- எழும்பூர் இடையிலான 4வது வழித்தட பணிகள் சுணக்கம்: பருவமழைக்குள் முடிக்கப்படுமா?

சென்னை, ஆக.23: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைப்பதற்கு, இந்திய கடற்படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அனுமதி கிடைக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில், அனுமதி கிடைத்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் வழித்தட மின்சார ரயில் சேவையை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது வழக்கம். சில நிமிடங்கள் ரயில் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். சமீபத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். ரயில்கள் சில மணி நேரம் இயங்காவிட்டால் அதை நம்பி உள்ள மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில், தற்போது சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் 4வது வழித்தடம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை இருந்தது. அதன்பேரில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.5 கி.மீ., தொலைவுக்கு ₹279 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. முதலில், இந்தாண்டு மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 4வது வழித்தட பணிகளால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயான ரயில் சேவை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், 4வது வழித்தட பணிகள் முடிந்து எப்போது வேளச்சேரி ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, எழும்பூர்- கடற்கரை இடையிலான 4வது வழித்தடத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் இதற்கான அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதுவரை எழுத்துப்பூர்வ அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அந்த குறிப்பிட்ட இடத்தில், பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான இடத்தில், ரயில்வே தண்டவாளம் வருவதால் கடற்படையினருக்கு பாதுகாப்பு இருக்காது என கடற்படை நிர்வாகம் சார்பில் கூறுவதாகவும், அதற்காக அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘எழும்பூர் – கடற்கரை இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டன. கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தில் உள்ள பணிகளை தவிர எஞ்சிய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. கடற்படை அனுமதி கடிதம் கொடுத்த ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும். இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்படும். ரயில்வே அமைச்சகம் கடற்படை தலைமையகத்திடம் பேசி வருகிறது. பருவமழைக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது,’’ என்றனர்.

The post கடற்படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அனுமதி கிடைக்காததால் கடற்கரை- எழும்பூர் இடையிலான 4வது வழித்தட பணிகள் சுணக்கம்: பருவமழைக்குள் முடிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Navy ,route ,Ramumbur ,CHENNAI ,INDIAN NAVY ,CHENNAI COAST ,RAMAMPUR ,Chennai Beach ,Navy Sunkam ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை கப்பல் மோதியதில்...