×

மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலந்து கொண்டு கூட்டப் பொருள்கள் குறித்து விவாதித்தார். இதை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “10 தலைப்புகளில் கூட்டப் பொருள்கள் சார்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்படுவதுபோல, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்று வரவேண்டும்.

எங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டுமோ, பொதுப்பணித் துறை செயலர் மூலமாக ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒரு ஆப் உருவாக்கச் சொல்லியிருக்கிறோம். மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தினசரி கண்காணிப்பதற்காக ஆப் உருவாக்கப்படவுள்ளது. பி.டி.ஏ கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசித்தோம். செய்தித்தாள்களில் வரக்கூடிய விவகாரங்கள், அவற்றை உடனடியாக களைவதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்கள் இடைநிற்றல் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். கிருஷ்ணகிரி தனியார் பள்ளி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அனுமதி இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. எந்த முகாமாக இருந்தாலும் அதை மதிப்பிடுவதற்கு முன்பாக, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி அனுமதி கொடுத்த பின்பாகவே செய்ய வேண்டும் என சொல்லி இருக்கின்றோம்.

பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள் அடிப்படையில் இந்த கூட்டத்தில் பேசியிருக்கின்றோம். கிருஷ்ணகிரி விவகாரத்தில் ஏற்கனவே துறை சார்ந்து அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் நடக்காத வண்ணம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 800 மருத்துவர்கள் ஒன்றியம் வாரியாக கவுன்சிலிங் கொடுத்து வருகின்றார்கள். ஒவ்வொரு தலைமை ஆசிரியருமே கவுன்சிலராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. மாணவர் மனசு என்ற பெட்டியின் மூலமாக பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சினை இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என சொல்லி இருக்கின்றோம். அந்த வகையில் கவுன்சிலிங்கை கூடுதலாக வளப்படுத்த வேண்டும் .

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தைரியமாக பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். அந்தப் பள்ளியில் கழிவறை தொடங்கி அனைத்தும் சரியாக இருக்கிறது என்கிற வகையில் நடவடிக்கை வேண்டும். தனியார் பள்ளி சார்ந்து இருக்கக்கூடிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றது. சரியான பராமரிப்பு இல்லாதது அந்த வாகனத்திற்கு தேவையான பாதுகாவலர் ஆகியவற்றை கண்காணிக்க கூறியுள்ளோம்.” என்று தெரிவித்தார். மேலும், கோவையில் போக்சோ சட்டத்தில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அன்பில் மகேஸ், “போக்சோ சட்டம் இருந்தாலும், மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

இதை கண்டுபிடித்து உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் பெரிய தண்டனையை இதுபோன்ற மனிதர்களுக்கு வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள். உடனடியாக எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பெற்றவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும். தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறாக இருந்து தெரியவந்தாலும் உடனடியாக எங்கள் கவனத்திற்கோ, எஸ்.எம்.சி அல்லது பி.டி.ஏ அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இதனால் பள்ளி பெயர் கெட்டுப் போகாது” என்று கூறினார்.

The post மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : MINISTER ,ANDIL MAHESH ,Chennai ,Parent Teacher Association ,Department of School Education ,Anna Centennial Library ,Koturpur, Chennai ,Minister of School Education ,Anbil Mahesh ,
× RELATED தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை