×

இடியுடன் கூடிய பரவலான கனமழை * அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவு * அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை மாவட்டத்தில், இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்தது. அதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக பெய்திருக்கிறது. மேலும், பருவமழை தற்போது தீவிரமடைந்திருப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ெதாடங்கி அதிகாலை வரை இடி மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை 43 மிமீ, செங்கம் 18.2 மிமீ, போளூர் 70 மிமீ, ஜமுனாமரத்தூர் 61 மிமீ, கலசபாக்கம் 65.6 மிமீ, தண்டராம்பட்டு 31 மிமீ, ஆரணி 3 மிமீ மழை பதிவானது. கனமழையால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 6 கால்நடைகள் உயிரிழந்தன. மேலும், 4 குடிசை வீடுகள் முற்றிலுமாகவும், 7 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன.

திருவண்ணாமலை நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும், மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்ததாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 266 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 91.70 அடியாகவும், கொள்ளளவு 2648 மி.கன அடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 11ம் தேதி அணையின் நீர்மட்டம் 81.95 அடியாக இருந்தது. கடந்த 10 நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 3140 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 49.03 அடியாகவும், கொள்ளளவு 4546 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 205 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 18.20 அடியாகவும், கொள்ளளவு 61.76 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 275 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 57.20 அடியாகவும், 234.83 மி.கன அடியாகவும் உள்ளது.

The post இடியுடன் கூடிய பரவலான கனமழை * அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவு * அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : THIRUVANNAMALAI DISTRICT ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்...