சென்னை, ஆக.22: சென்னையில் 1,265 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, 96 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதோடு, அனுமதியின்றி வைக்கப்பட்ட 47 விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் 418.56 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து தட சாலைகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டு, நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பை கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றுதல், கேட்பாரற்று கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த தொங்கும் கேபிள் வயர்கள் அகற்றுதல், எரியாத மின் விளக்குகளை ஒளிர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 5270 கி.மீ. நீளமுள்ள 36,640 உட்புறச் சாலைகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தை பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட 1,265 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் (மாஸ் கிளினிங்) நேற்று நடந்தது. இந்த பணிகளில் 2,541 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அலுவலர்கள் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டன.
பேருந்து நிறுத்தங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த குப்பை மற்றும் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் தூய்மைப்படுத்துதல், தேவையற்ற செடி, கொடிகள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவிர தூய்மைப் பணியில், 48.7 மெட்ரிக் டன் குப்பை, 47 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள், 4,221 சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட 47 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு, 5,402 பயணிகள் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணிகளின் போது பேருந்து நிறுத்தங்களில் 78 சிறுசிறு பழுதுகள் கண்டறியப்பட்டு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலைகளையும், பேருந்து நிறுத்தங்களையும், பாதசாரிகள் நடக்கின்ற நடைபாதைகளையும் தூய்மையாக வைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும், பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் உள்ள புகார்கள் குறித்து மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 1,265 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி 96 மெட்ரிக் டன் குப்பைக்கழிவு; 47 விளம்பர பதாகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி அதிரடி appeared first on Dinakaran.