×

நீலகிரியில் ‘கரடிகள்’ எண்ணிக்கை அதிகரிப்பு

 

ஊட்டி, ஆக. 21: நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு யானை, காட்டு மாடுகள், சிறுத்தை, புலி மற்றும் கரடி ஆகியவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது.

கரடிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளன. இவைகள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகேயுள்ள தேயிலை தோட்டங்கள், புதர்கள் ேபான்ற பகுதிகளில் வலம் வருகின்றன. இவைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களில் வலம் வருகின்றன. இரவு நேரங்களில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. வீடு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து பொருட்களை எடுத்து செல்வது, கோயில்களுக்குள் நுழைந்து எண்ணை, பூஜை சாமான்களை சூறையாடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

மேலும், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் வரும். ஆனால், தற்போது மாலை நேரங்களிலேயே வரத்துவங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள குடியிருப்புகள், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புக்களில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பகல் நேரங்களிலும் சில தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம், பெங்கால்மட்டம், தேவர்சோலை, மஞ்சூர், குந்தா, ஒண்டிவீடு, நுந்தளா மட்டம், பாலகொலா, அதிகரட்டி போன்ற பகுதிகளில் தற்போது கரடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இது போன்று மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

The post நீலகிரியில் ‘கரடிகள்’ எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,Nilgiri ,Nilgiri district ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்