×

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யபப்ட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக’ நிறுவனரான தேவநாதன் யாதவ் உள்ளார். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் வெடித்த நிதி மோசடி புகார் முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

முதலீட்டாளர்களுக்கு கொடுத்த ஏராளமான காசோலைகளும் வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவன நிதியை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாகவும் முதலீட்டாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏற்கனவே 144 புகார்கள் வந்த நிலையில் தற்போது மேலும் 300க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. முதலீட்டாளர்களின் புகாரின் பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாக உள்ள நிதிநிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாலமன், முன்னாள் இயக்குனர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தேவநாதன் யாதவுக்கு சொந்தமான வீடு, தனியார் தொலைக்காட்சி உட்பட 12 இடங்களில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் நிதி நிறுவனத்திற்கும், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யபப்ட்டுள்ளது. நிதிநிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து தேவநாதனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

The post மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : MYLAPUR ,DEVANATHAN ,Chennai ,Maylapur ,The Mailapur Hindu Permanent Deposit Fund Limited ,South Mata Road, Chennai, Maylapur ,Mailapur ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி...