போபால்: மபி மாநிலம் மண்ட்செளர் மாவட்டம் தேவாரியா கிராமத்தை சேர்ந்த விவசாயி கமலேஷ் படிதார். இவர் தனது தோட்டத்தில் சோயாபீன் பயரிட்டுள்ளார். ஆனால் சோயாபீன் பயிருக்கு உரிய விலை கிடைக்காததால் 7 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட சோயாபீன் பயிர்களை டிராக்டர் ஏற்றி அழித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து, மபி முதல்வர் மோகன் யாதவ் மற்றும் ஒன்றிய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை அந்த பதிவில் டேக் செய்து, ‘இந்த வலி ஒருவருக்கு மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வலி. பா.ஜ ஆட்சிக்கு வந்த பிறகு சோயா பயிரின் குறைந்தபட்ச விற்பனை விலை குறித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி விவசாயி கமலேஷ் படிதார் கூறுகையில்,’ என்னிடம் 140 குவிண்டால் பழைய சோயாபீன் உள்ளது. ஷம்கர் மண்டியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,800க்கு வாங்குகிறார்கள்.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். ஒரு குவிண்டால் சோயாபீன் உற்பத்தி செய்ய ரூ.8,000வரை செலவழிக்க வேண்டும். இந்த பயிருக்கு ரூ.3800 கிடைத்தால் என்ன பயன்?. அதனால் 7 ஏக்கர் சோயாபீன் பயிர்களை அழித்துவிட்டேன்’ என்றார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவுகிறது.
The post சரியான விலை கிடைக்காததால் 7 ஏக்கர் சோயாபீன் பயிரை டிராக்டரால் அழித்த விவசாயி: மத்தியபிரதேசத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.