×

ஊத்துக்காடு ஊராட்சியில் தொடரும் பிரச்னைகளை தடுக்க ஊராட்சி துணை தலைவரின் செக் அதிகாரத்தை பறிக்க வேண்டும்: தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: ஊத்துக்காடு ஊராட்சியில் தொடரும் பிரச்னைகளை தடுக்கும் வகையில், ஊராட்சி மன்ற துணை தலைவரின் செக் அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தலைவர் – வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவராக சாவித்திரி மணிகண்டன் பதவி வகித்து வருகிறார்.

ஊத்துக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவராக 8வது வார்டு உறுப்பினர் வனஜா லட்சுமணன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கும் வனஜாவின் கணவர் லட்சுமணன், தொடர்ந்து ஊராட்சி விவகாரத்தில் தலையிட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர் ஊராட்சி வளர்ச்சி பணிகளை தடுப்பதாகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பிரச்னை செய்து வருவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரியிடம், வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், ஊராட்சியில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் துணைத் தலைவர் தலையிட்டு, பிரச்னை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மாதம் 2ம்தேதி நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், துணை தலைவரின் செக் பவர் அதிகாரத்தை பறிக்கக்கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஊராட்சி மன்றத்தில் முதல் கணக்கு பணியாளர் ஊதியம் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒவ்வொன்றுக்கும் ஓடிபி சொல்வதற்கு காலதாமதம் செய்வதாகவும், சம்பந்தப்பட்ட ஓடிபி எண் கொண்ட செல்போனை அவரது கணவர் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், கலெக்டரை நேரில் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து மனு அளித்தனர்.  உடனடியாக ஊராட்சி மன்றத் துணை தலைவரின் செக் பவர் அதிகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

The post ஊத்துக்காடு ஊராட்சியில் தொடரும் பிரச்னைகளை தடுக்க ஊராட்சி துணை தலைவரின் செக் அதிகாரத்தை பறிக்க வேண்டும்: தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Oothukadu panchayat ,panchayat ,vice ,Kanchipuram ,Oothukkadu panchayat ,Kalachelvi Mohan ,vice president ,Kanchipuram District ,Wallajahabad Union ,Oothukadu ,
× RELATED கேளம்பாக்கம் ஊராட்சி குப்பைகளை...