×
Saravana Stores

ராஜத்துக்கு துணை குலதெய்வம்

பகுதி 3

பதினைஞ்சு நாள் லீவுல குடும்பத்தோட வர்றதா கடிதம் போட்டிருந்த ரெண்டாவது மகன், ஊருக்கு வந்து நாலு நாள் மட்டும்தான் தங்கினான். அவனிடம் எங்கள் ஆசையை சொன்னோம். உடனே, ‘அடாடா… என் மச்சினன், அவன் மனைவி, குழந்தைகள் எல்லாம் ஜாம்ஷெட்பூர் வர்றதா முன்னாடியே ‘பிளான்’ பண்ணியாச்சே! அதனால நீங்கள் அப்புறமா வரலாம்!’ என்று சிரிச்சுண்டே சொன்னான். நாங்க வெறுத்துப் போய்ட்டோம்.‘கௌரவமா வாழ்ந்துண்டிருந்த நமக்கு இப்படி ஒரு கதி வந்துடுத்தே ராஜம்’னு புலம்பினார் கணவர். இனிமே அந்த வீட்ல காலம் தள்ளுறது சிரமம்னு புரிஞ்சு போச்சு. ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம்.

மதுரையில வசிக்கிற எங்க பொண்ணு அகிலாண்டேஸ்வரி வீட்டிற்கு போயிடறதுனு தீர்மானிச்சோம்.சங்கரநாராயணனும் ஜானகியும், ‘அங்கெல்லாம் நீங்க போக வேண்டாம்’னு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லலே! ‘போய் இருந்துட்டு வாங்களேன்’னு பட்டுனு சொல்லிவிட்டாங்க. எனக்கு துக்கம் தொண்டைய அடைச்சுது. வேற வழி தெரியலை. மதுரைக்குப் புறப்பட்டுட்டோம். மதுரை தல்லாகுளம் பகுதியில அகிலாண்டேஸ்வரி குடித்தனம் இருந்தாள். சின்ன வீடுதான். போன புதுசுல எங்களுக்கு அப்படி ஒரு ராஜ மரியாதை நடந்தது!

நாளாக ஆக மரியாதையெல்லாம் எல்லாம் குறைய ஆரம்பிச்சது. ஒரு நாள்… அகிலாண்டேஸ்வரி என் கணவரிடம், ‘ஏம்ப்பா… இப்படியே உட்கார்ந்திருந்தா உங்களுக்கு போரடிக்கலையா? ஏதாவது ஒரு கடையில வேலை பார்த்து கணக்கு எழுதினால், உங்களுக்கும் பொழுது போகும் … நாலு காசும் சம்பாதிச்ச மாதிரி இருக்கும்’னு என்று நாசூக்காக…
சுருக் நறுக்னு குத்திட்டாள் எங்க ஆத்துக்காரர் என்னை ஏறிட்டார். நான் கண்கலங்கி நின்றேன்!அவர் மானஸ்தர். சிரித்தபடியே, ‘அகிலாண்டம் நீ சொல்றதும் உண்மை தான். நாளைக்கே டவுனுக்குப் போய் ஏதாவது கடையல கணக்கு எழுதற வேலை கிடைக்குமானு தேடறேன்… என்ன ராஜம் சரிதானே?’னு என்னை பார்த்தார். மனம் உடைந்து போயிட்டேன் நான்!

அடுத்த நாள் மாலை டவுன்லேர்ந்த சிரிச்சுண்டே வந்த என் கணவர், ‘ராஜம் எனக்கு ஒரு வேலை கிடைச்சுடுத்து. மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல சமையல் காண்டிராக்டர் ஒருத்தர் இருக்கார். ராகவ ஐயர்னு பேரு. அவரோட வரவு செலவு கணகெல்லாம் எழுதணுமாம். தினமும் இருவது ரூபா சம்பளம் தர்றேன்னார். சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்’ என்றார். நான்
ஒண்ணும் பேசலை.ஆனால் அகிலாண்டேஸ்வரி, ‘தினமும் இருபது ரூபாய்னாலும் காய்கறி செலவுக்காக பயன்படும் அல்லவா!’ என்றாள் மிகுந்த சந்தோஷத்தோடு.
அடுத்த நாள்ல இருந்து கணக்கு எழுத போய்ட்டு வந்தார் அவர். அன்றாடம் இருவது ரூபாய் பொண்ணு வாங்கிப்பா. சமைக்கிறதுலேர்ந்து எல்லா வீட்டு வேலைகளையும் நானே செஞ்சேன். வேற வழி இல்லாம இப்படி ஆறு மாசம் ஓடிடுச்சு.!

ஒரு ஞாயித்துக்கிழமை. நானும் என் கணவரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனோம். தரிசனம் முடிஞ்சு பிரகாரத்தை வலம் வர்றப்ப… நடுத்தர வயசு பிராமணர் ஒருவர் அருகில் வந்தார். விஸ்வநபாய்யரே… நாளைக்கு மேல வீதியில ஒரு காதுகுத்தி கல்யாணம். உங்களை பார்த்து சொல்லும்படி ராகவன் அண்ணா சொன்னார். ஆட்கள் இல்லாததால நாளைக்கு நீங்கள் தான் காய்கறி நறுக்கி கொடுக்கிறதோட… நூறு பேருக்குப் பரிமாறவும் செய்யணும்! இருவதோடு இன்னும் பத்து சேர்த்து முப்பது ரூபாய் கிடைக்கும்னு ராகவண்ணா சொல்லச் சொன்னார். சீக்கிரமா வந்துவிடுங்கள்!’ என்றார்.

நேக்கு தூக்கிவாரிப் போட்டுடது. கணவரைக் கோபமா பார்த்தேன். அவர் நா தழுதழுக்க, ‘ராஜம்… நான் சமையல் வேலை பண்ணித்தான் தினமும் இருவது ரூவா சம்பாதிச்சுண்டு வரேங்கறத உங்கிட்ட சொல்லாதது தப்புதான். உண்மைையச் சொன்னா நீ போக விடமாட்டே. ஆனால் அகிலாண்டமோ… சம்பாதிச்சுண்டு வரணுங்கறா. வேற வழி இல்லாமதான் வரவு-செலவு கணக்குனு பொய் சொன்னேன். என்னை மன்னித்து விடு’ என்று குழந்தை மாதிரி கேவிக் கேவி அழ ஆரம்பிச்சுட்டார். அவர் கையைப் புடிச்சுண்டு நானும் அழுதேன்.
இதைப் பத்தி அகிலாண்டத்துகிட்ட நாங்க மூச்சு விடலை. இப்படியே எட்டு மாச காலம் ஓடிடுச்சு.

ஒரு நாள் … காலையில் வேலைக்குப் போன என் கணவர் வீடு திரும்பவே இல்லை! மதுரை முழுக்க சல்லடை போட்டு அலசிட்டோம்… சாயங்காலமே வேலையை முடிச்சுண்டு கிளம்பிட்டதாகத்தான் எல்லோரும் சொன்னா. ராத்திரி முழுக்க நேக்கு தூக்கம் இல்லை! போனவர் போனவர்தான். உயி ரோட இருக்காரா… இல்லையானு தெரியலே. கட்டுன பொண்டாட்டியை… இத்தனை வருஷம் கழிச்சு, பொண்ணாத்துல தவிக்க விட்டுட்டு ஓடிட்டாரே … இது, தர்மமா? நீங்கள்லாம் ஒரு புருஷனா’னு நித்தியம் புலம்பிண்டிருப்பேன். அதுதான் மிச்சம்!

அப்போல்லாம் நான் தவிச்ச தவிப்பு… அந்த அகிலாண்டேஸ்வரிக்குத்தான் தெரியும்டாப்பா!ஆறு மாசம் கழிச்சு, திடீர்னு ஒருநாள்… திருச்செங்கோடுல இருந்த ஒரு ஆஸ்ரமத்துலேருந்து ‘உடனே புறப்பட்டு வரவும்’னு ஒரு தந்தி! மாப்பிள்ளையை துணைக்கு அழைச்சுண்டு ஓடினேன்.அந்த ஆசிரம நிர்வாகி என்னை அன்பாக வரவேற்று உட்காரச் சொல்லிட்டு, ‘விஸ்வநாத ஐயர் உங்க கணவரா?’னு கேட்டார். ‘ஆமாம். இப்போ அவர் எங்கே இருக்கார்?’னு கேட்டேன். அதற்கு அவர் ரொம்ப வருத்தத்தோடு, ‘அவர் சிவலோக பிராப்தி அடைஞ்சு பதினைஞ்சு நாளாகிறது’னு சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எல்லாமே பறிபோய்ட்டாப்ல கதறி அழுதேன்.

என்னை ஒருவழியா சாந்தப்படுத்திய அந்த நிர்வாகி, ‘அம்மா… ஆறேழு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்த விஸ்வநாதய்யர், யாருமே இல்லாத அநாதைனு சொல்லித்தான் இங்கே சேர்ந்தார். தனக்கு ஏதாவது ஆயிட்டா நீங்களே காரியங்களைப் பண்ணி முடிச்சுடலாம்னும் தன் கைப்பட எழுதிக் கொடுத்திருக்கார். அவர் காலம் ஆகுறதுக்கு முதல் நாள் ராத்திரி திடீர்னு ‘நெஞ்சு வலிக்குது’ன்னார். டாக்டர் வந்து பார்த்து, மருந்து, மாத்திரை கொடுத்தும் பலன் இல்லை. அடுத்த நாள் காலையில அவர் எழுந்திருக்கவே இல்லை. போய்ச் சேர்ந்துட்டார்.

ரெண்டு நாள் முன்னாடி அலமாரியை சுத்தம் பண்ணினோம் … ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்துக்குப் பின்னால ஒரு டைரி இருந்துச்சு. அதைப் படிச்சப்பதான் மதுரை தல்லாகுளம் விலாசம் கிடைச்சுது. உடனே தந்தி கொடுத்தோம். டைரியில நிறைய விஷயங்களை எழுதி வெச்சிருக்கார்… படிச்சுப் பாருங்கள் !’ என்றார்.தனியாக உட்கார்ந்து, கண்ணீரோடு டைரியைப் படித்துப் பார்த்தேன்.பதினஞ்சு பக்கத்துக்கு ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதியிருந்தார். அப்புறம் ‘அகிலாண்டேஸ்வரி சஹாயம்’னு ஒரு இருபது பக்கம். அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். அதுல…

‘சௌபாக்கியவதி ராஜத்துக்கு ஆசீர்வாதங்கள். இந்த டைரி என்றாவது ஒரு நாள், உன் கண்ணுல படும்கிற நம்பிக்கையுடன் சில உண்மைகளை இதுல எழுதி வெச்சிருக்கேன். படிச்சுப் பார்க்கறச்சே உனக்கே புரியும். உன்னை விட்டுட்டு நான் ஓடி வந்துட்டதா நீ நினைக்கலாம் . ஆனால்… சத்தியமா அப்படி இல்லே. என்னை நம்பு. அன்னிக்கு நடந்ததை நான் சொல்றேன், கேளு…வேலையை முடிச்சுண்டு ஏழு மணிக்கு வீடு திரும்பினேன். வாசல் கதவு முழுமையா மூடாமல் திறந்து இருந்தது. கூடத்தில் உன்கிட்ட நம்ம பொண்ணு அகிலாண்டம் பேசிண்டு இருந்தது காதில் விழுந்தது. என் பேரு அடிபட்டதால கொஞ்சம் நிதானிச்சேன்!

நம்ம செல்லப் பொண்ணு அகிலாண்டம் உன்னிடம் ‘அம்மா… இன்னிக்கு ஒரு விஷயத்தை உன்னிடம் தீர்வா பேசிடறதுனு முடிவு பண்ணிட்டேன். தப்பா எடுத்துக்காதே. அப்பாவை வெச்சுண்டு இதைப் பேசினா நல்லா இருக்காது. உங்க ரெண்டு பேரையும் இங்கே வீட்டுல வெச்சுண்டு சாப்பாடு போட்டு எங்களால சமாளிக்க முடியலை. என் கணவருக்கும் குறைந்த சம்பளம். அப்பா தர்ற இருவது ரூவாயெல்லாம் எதுக்கு காணும்… சொல்லு! சும்மா சொல்லப்டாது… சமையல் வேலை, துணிமணி யெல்லாம் தோச்சு உலர்த்தறது, பாத்திரம் தேய்க்கிறதுன்னு நீ ரொம்ப உதவியாதான் இருக்கே.

அதனால… ஒண்ணு சொல்றேம்மா கேளு… நீ மட்டும் எங்களோட இருந்துடு. அப்பாவை வேற எங்கேயாவது அநாதை ஆசிரமத்துல போய் இருக்கச் சொல்லிடு! என்னடா. அகிலாண்டம் இப்படி பேசறேன்னு தப்பா எடுத்துண்டுடாதே’னு அவள் கறாரா பேசினதை கேட்டு நொறுங்கிப் போயிட்டேன்.சிறிது நேரம் வாசல்படிகிட்ட நின்று யோசனை பண்ணினேன். அந்த வாசல் தாண்டி உள்ளே வர அவமானமா இருந்துச்சு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். நீயாவது பொண்ணு கிட்ட சௌக்கியமா இருக்கணுமேங்கற எண்ணத்துலதான் உங்கிட்ட கூட சொல்லிக்காமல் கிளம்பி வந்துட்டேன். நான் உன்னை தவிக்க விட்டுட்டு ஓடி வந்துட்டதா நெனைச்சுண்டுடாதே ராஜம். எனக்கு வேற வழி தெரியலை. என்னை மனசார மன்னிச்சுடு.

நம்ம பொண்ணு, பிள்ளைங்க யாருமே நமக்கு உதவியா இல்லேங்கறது புரிஞ்சுடுத்து! உனக்கு ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன். நம்ம குலதெய்வம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மா இருக்காளே… அவள் ஒருத்திதான் நமக்கு பாதுகாப்பு! இதை மட்டும் நீ உணர்ந்தா போதும். இந்த டைரியில் நான் எழுதியிருக்கிற விஷயங்களை என்னிக்காவது படிக்கும்படி நேர்ந்தால்… எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணு!

பிள்ளை… பொண்ணுனு ஒருத்த வீட்டு வாசல்படி என்று இனி நிற்காதே . நேரா திருவானைக்காவல் போ! அம்மா அகிலாண்டேஸ்வரியின் வீட்டு வாசல் படிக்கு வெளியில உட்கார்ந்து யாசகம் எடுத்து சாப்பிடு; கேவலமே இல்லை! நம்ம அம்மன் தினமும் உனக்குப் படியளப்பா. இதை, என் அன்புக் கட்டளையா எடுத்துண்டு நீ நடக்கணும். அப்போதான் என் ஆத்மா சாந்தி அடையும்… முடித்து, பூரண ஆசீர்வாதங்களுடன் விஸ்வநாதன் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.

அதை படிச்சிட்டு, கதறி அழுதேன். என்னுடன் வந்திருந்த மாப்பிள்ளையிடம் கூட டைரி சமாசாரத்தை நான் சொல்ல வில்லை. மன சாந்திக்காக நாலு நாட்கள் அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கி விட்டு வருவதாகக் கூறி, அவரை மதுரைக்கு அனுப்பி விட்டேன்!மறு நாள் காலை, என் கணவரை தகனம் செய்த ‘ருத்ரபூமி’ (சுடுகாடு)க்கு ஆஸ்ரம நிர்வாகியுடன் சென்றேன். நமஸ்காரம் பண்ணினேன். அந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு, உங்கள் கட்டளைப்படியே நடப்பேன்… இது சத்தியம்’னு உறுதி எடுத்துண்டேன்.

அன்னிக்கு ராத்திரியே திருவானைக்காவல் புறப்பட்டுட்டேன். மறுநாள் காலையில் காவிரி ஸ்நானம் பண்ணிட்டு, அகிலாண்டேஸ்வரி காலடியில வந்து உட்கார்ந்துட்டேன். இங்க வந்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகப் போறது!” என்று நிறுத்திய ராஜலட்சுமி அம்மாள் நீண்ட பெருமூச்சு விட்டார்.பெரிய மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது எனக்கு. உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் வாய்விட்டு அழுதேன். என்னை சமாதானப்படுத்தி ராஜலட்சுமி அம்மாள் தொடர்ந்தார்:

இதையெல்லாம் கேக்கற உனக்கே துக்கம் தாங்க முடியலேயே… அனுபவிச்ச எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்… யோசனை பண்ணிப் பாரு! இப்படி இருக்கறச்சே… ஒரு பிரதோஷ கால வேளை. வெள்ளிக்கிழமைன்னு ஞாபகம், அன்னிக்கு ஏகப்பட்ட கூட்டம். நாங்கள்லாம் ஓர் ஓரமா உட்கார்ந்து யாசகம் எடுத்துண்டிருந்ேதாம். தரிசனம் பண்ணிட்டு வந்த நிறைய சேவார்த்திகள் காசு போட்டுண்டே போனா. அப்போது நான் கண்ணை மூடிக் கொண்டு, ‘அகிலாண்டேஸ்வரி சகாயம்’னு ஜபம் பண்ணிண்டிருந்தேன்.அப்போது ரொம்பவும் பரிச்சயமான குரல் ஒண்ணு காதில் விழுந்தது. நிமிர்ந்து பார்த்தால்… என் இரண்டாவது மகன் சந்திரசேகரன்தான்! அவனுக்கு அருகில் என் மருமகள் வத்ஸலாவும் பேரனும், பேத்தியும், என்னை, அவர்களுக்கு அடையாளம் தெரியலே.

சந்திரசேகரன் தன் பர்ஸைத் திறந்து எனது பாத்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை பிசையாகப் போட்டான். மருமகளிடம் ஒரு ரூபாய் கொடுத்து போடச் சொன்னான். அதற்குள் பேரனும், பேத்தியும், ‘அப்பாப்பா… நாங்களும் இந்தப் பாட்டிக்குப் பிச்சை போடறோம்’னு சொல்லி காசு வாங்கி… பேரன் எட்டணாவும், பேத்தி நாலணாவும் போட்டனர்.

எனக்கு துக்கம் தொண்டையை அடைச்சுது. அதை வெளிக்காட்டிக்கவே இல்லை . அவர்கள் நகர்ந்ததும் துக்கம் தாங்காம அழுதேன். நீயே சொல்லு… சொந்தப் பிள்ளை, மருமகள் , பேரன், பேத்திகள் கிட்ட இந்த உலகத்துல யாராவது பிச்சை எடுத்திருப்பாளா? அந்த பரம பாக்கியம் எனக்குத் தான் கிடைச்சுது. இதோ பாரு அவா போட்ட பிச்சையை என் புடவைத் தலைப்புலயே முடிஞ்சு வெச்சுண்டிருக்கேன்!” என்று அந்த நாணயங்களைக் காண்பித்தார்!

பிறகு அவரே தொடர்ந்தார். “ஒரு வேளை, திடீர்னு நான் செத்துப் போயிட்டாலும்… என் புடவைத் தலைப்புல முடிஞ்சு வெச்சிருக்கிற இந்தப் பிச்சைக் காசுகளோடயே என்னைக் காவிரியில இழுத்து விட்டு விடும்படி இங்கிருக்கிறவாள்ட்ட கேட்டுண்டிருக்கேன். அகிலாண்டேஸ்வரி என் ஆசையை நிச்சயமா பூர்த்தி பண்ணுவாள்னு நம்பறேன்!என் அவலமான வாழ்க்கைச் சரித்திரத்தை பொறுமையா கேட்டுத் தெரிஞ்சுண்டே! சரி, சரி… ரொம்ப நாழி ஆயிடுத்து. ஜாக்கிரதையா போயிட்டு வா!” என்று விடை கொடுத்தார் ராஜலட்சுமி அம்மாள். கனத்த மனதோடு புறப்பட்டேன்.

மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் திருவானைக்காவல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.ராஜலட்சுமி அம்மாளைத் தேடினேன். கண்ணில் படவில்லை. விசாரித்தபோது… ஒரு வருடத்துக்கு முன், காவிரியில் குளிக்கும்போது வழுக்கி விழுந்து வெள்ளத்தோடு போய் விட்டதாகக் கூறினார்கள். அவரது ஆசைப்படியே புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த நாணயங்களும் அவரோடு போயிருக்கும் என்பதை நினைத்தபோது என் கண்கள் பனித்தன!

ராஜலட்சுமி அம்மாள் சாயலில், யாராவது ஒரு பெண்மணியை இன்றைக்கும் எங்காவது நான் சந்திக்க நேர்ந்தால் சிறுவினாடி என் கால்கள் தடுமாறும். கண்கள் நீரைச் சொரியும். அந்த அளவுக்கு என்னைப் பெரிதும் பாதித்த பெண்மணி-ராஜலட்சுமி அம்மாள்!இந்த உலகத்தில் இவர்போல் எத்தனை ராஜலட்சுமிகளோ? இப்படிப்பட்டவர்களுக்கு இருக்கிற ஒரே துணை – தெய்வம்தான்!

ரமணி அண்ணா

 

The post ராஜத்துக்கு துணை குலதெய்வம் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Kuldeivam ,Leuel ,Adada ,Jamshedpur ,Khuladai Kuladaivam ,
× RELATED எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி...