திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி பீதியை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் தெரிவித்திருந்த போதிலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக கூறி வதந்திகள் பரப்பப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இடுக்கியில் நடந்தது.
கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும், புதிய அணை கட்டுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் அமைச்சர் அகஸ்டின் கூறுகையில், ‘‘முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது.அணை ஆபத்தில் இருப்பதாகவும், உடையப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இது தவறாகும்’’ என்றார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி நேற்று பேசுகையில்,‘‘முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுப்பிய பதிவை பேஸ்புக்கில் பார்த்தேன்.
அணை உடையுமா அல்லது உடையாதா? என்ற கேள்வி என்னுடைய இதயத்தில் ஒலித்து கொண்டேயிருக்கிறது.ஒருவேளை அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்.நீதிமன்றங்கள் பதில் அளிக்குமா? நீதிமன்றங்களில் உத்தரவை பெற்று வருபவர்கள் அணை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற முடிவை தெரிவிப்பார்களா. அவர்களுடைய செயல்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது’’ என்றார்.
The post முல்லை பெரியாறு அணை உடைந்தால் பொறுப்பு ஏற்பது யார்? பீதியை கிளப்பும் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி appeared first on Dinakaran.