×

மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரிமோசடி: பில் கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரி மோசடி செய்ததாக புகாரின் பேரில் பில் கலெக்டர்கள் 5 பேரை கமிஷனர் தினேஷ்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் சுமார் ரூ.97 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட பில் கலெக்டர்கள் வரிவசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்தந்த பகுதி கணினி வசூல் மையங்களுக்கு ஏற்ப பில் கலெக்டர்களுக்கு தனித்தனியாக மாநகராட்சி நிர்வாகம் ஐடி மற்றும் பாஸ் வேர்டு வழங்கியுள்ளது.

கிழக்கு, வடக்கு, மத்தி, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய 5 மண்டலங்களில் வரி வசூலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதன்மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடிக்கு வரி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் கமிஷனர் தினேஷ்குமாருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் குழுவை கமிஷனர் நியமித்து ஆய்வுக்குட்படுத்தி விசாரணை நடந்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரியும் பில் கலெக்டர்களில் 5 பேர் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதலாக வரி வசூலிக்க வேண்டிய கட்டிடங்களின் வரியை குறைத்திருக்கின்றனர்.

இவ்வாறு பில் கலெக்டர்கள் மாநகராட்சியால் விதிக்கப்பட்ட வரியை சுமார் ரூ.1.50 கோடி வரை முறைகேடாக குறைத்து காட்டியுள்ளனர். வரி ஏய்ப்பு நடந்திருப்பதை சிறப்பு அதிகாரிகள் குழுவினர் கண்டுபிடித்து கமிஷனர் தினேஷ்குமாருக்கு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.  அதனடிப்படையில் பில் கலெக்டர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு பங்கு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 17 பில் கலெக்டர்களையும் விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரிமோசடி: பில் கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Madurai Corporation ,Madurai ,Commissioner ,Dinesh Kumar ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் வரி வசூலர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து