சென்னை: நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதோடு போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, வங்கியில் கடன் பெற்று 3 கோடியே 30 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இது மனுதாரரின் உதவியுடன் நடந்ததாலேயே குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள். போலீசார் விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம். எனவே, செல்வராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதுபோல குண்டர் தடுப்புச் சட்டம் சாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது. சட்டவிரோதமாக ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும் அது சட்டவிரோதமாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று உத்தரவில் கூறியுள்ளனர்.
The post தனி நபர்கள் சார்ந்த குற்றங்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்த கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.