புதுடெல்லி: உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர் குறித்து சிஐஎஸ்எப் – டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ெடல்லியில் நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியை சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தின் இணைப்பு கட்டிடம் அமைந்துள்ள இம்தியாஸ் கான் சாலை பகுதியில் இருந்து, மர்ம நபர் ஒருவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள், 20 வயதுடைய அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘நாடாளுமன்ற வளாகத்திற்குள் சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தார். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த மணீஷ் என்பது தெரிய வந்துள்ளது. அவரை உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்துள்ளோம். அவர் எப்படி சுவர் ஏறி குதித்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிகிறது. அவரிடம் சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின. நாடாளுமன்ற பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுவது இது முதல் முறையல்ல; ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, அவைக்குள் நான்கு பேர் குதித்தனர். அவர்கள் மஞ்சள் புகை குண்டுகளை வீசினர். அதே நேரத்தில், இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பினர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பில் இருந்து டெல்லி போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி மீண்டும் குளறுபடி; நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர் யார்..? சிஐஎஸ்எப் – டெல்லி போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.