தேனி, ஆக.17: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொதுவிருந்து நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பொது விருந்து நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
தேனித் தொகுதி எம்பியும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்க தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது, அம்மனுக்கு சாத்தப்பட்ட 109 சேலைகளை பெண் பக்தர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா மற்றும் தங்கதமிழ்செல்வன் எம்.பி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தியாகராஜன் வரவேற்றார்.
இதில் பேரூராட்சி சேர்மன் கீதாசசி, தேனி தாசில்தார் ராணி, பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கோயில் அன்னதான மண்டபத்தில் சுமார் 1250 பேருக்கு அறுசுவை உணவுடன் கூடிய பொதுவிருந்து நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில், வீரபாண்டி கோயில் செயல்அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் மேலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post சுதந்திர தினத்தையொட்டி வீரபாண்டி கோயிலில் பொது விருந்து: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.