×
Saravana Stores

கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்’’ என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஷ்கரில் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம். கணவரின் பணி காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வந்தாலும், தனக்கென்று தனித்துவமான தொழில் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இவர் ‘நித்யா ஹோம் மேட்ஸ்’ என்ற பெயரில் காஸ்மெடிக் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து தமிழகம், பெங்களூர், சட்டீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார். கதக் நடனக் கலைஞரான தனக்கு காஜலும் செய்ய பிடிக்கும் என்கிறார்.

காஸ்மெடிக்ஸ் துறையில் ஆர்வம்…

கணவரின் பணி காரணமாக இந்தியாவின் பல ஊர்களுக்கு மாற்றலாகி செல்ல வேண்டி இருந்தது. ஒரு ஊரில் நாங்க நிரந்தரமாக தங்கியது இல்லை. மேலும் எனக்கு ரொம்ப நாளாகவே அழகு துறை சார்ந்து சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. காரணம், எனக்கு நம்மை அழகாக எடுத்துக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதில் நான் ரொம்பவே கவனமா இருப்பேன். ஆனால் என் கணவரின் பணி காரணமாக நிலையாக ஒரு இடத்தில் தொழில் செய்ய முடியவில்லை. ஆனால் எனக்கான தனித்துவமான சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆசைகளும் மனதுக்குள் எப்போதுமே இருந்து வந்தது. அதற்கு முன்னோடியாக நான் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு முறையாக சென்று முழுமையாக கற்றுக்கொண்டேன்.

இதனை நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தயாரித்து ஆன்லைன் முறையில் விற்பனை செய்யலாம் என்பதால் நான் எனது நீண்ட நாள் கனவான காஸ்மெடிக்ஸ் தொழிலை துவங்கினேன். அப்படித்தான் வீட்டில் இருந்தபடியே ‘நித்யா ஹோம்மேட்ஸ்’ பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து நான் வசிக்கும் இடத்தில் தெரிந்தவர்கள் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். பொருட்கள் தரமாக இருந்ததால் வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர். தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்ய துவங்கினேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பம்தான் முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த வெற்றியின் உயரத்தை நிச்சயம் அடைந்திருக்கவே முடியாது.

உங்களின் தயாரிப்புகள்…

பல்வேறு வகையான பேஸ்வாஷ்கள், லிப்பாம்கள், 44 வகை சோப்கள், மூலிகை ஹேர் ஆயில், மூலிகை ஷாம்பு, கண்டிஷனர், பாடி பட்டர், காஜல், ஸ்கிரப் போன்றவற்றினை பல்வேறு ஃப்ளேவர்களில் தயாரித்து தருகிறேன். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க அதனை கஸ்டமைசும் செய்து தருகிறோம். அதுதான் எங்களின் ஸ்பெஷாலிட்டியே. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க தயாரித்து தரும் வரை அதற்காக காத்திருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதுதான் எங்களின் பலம் என்று சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய
காரணம் எங்க பொருள் மற்றும் தரத்தின் மேல் உள்ள நம்பிக்கை.

உங்களின் கண் மை குறித்து…

பெண்களை மேலும் அழகாக எடுத்துக் காட்டுவது அவர்களின் கண்கள். அதனை நாம் அழகுப்படுத்தும் போது அவர்கள் மேலும் அழகாக தெரிவார்கள். பொதுவாக மை தானே! சுத்தமான விளக்கெண்ணெயை பெரிய அகல் விளக்கில் ஊற்றி பருத்தி திரியை எரிய வைத்து அதன் மேல் தட்டு போட்டு மூடினால் போதும், அதில் படியும் கருமைதான் மை என்பார்கள். ஆனால் அதனை தயாரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. காரணம், இந்த விளக்கு நாள் முழுதும் எரிந்தாலும் அதில் இருந்து குறைந்த அளவுதான் மை கிடைக்கும். மேலும் விளக்கு எரிகிறதா? தட்டில் கரி படிகிறதா? என பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். நான் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐம்பது காஜல் வரை தயாரிக்கிறேன். நல்ல தரமான கண் மை வேண்டும் என்றால் பொறுமை மிகவும் அவசியம்.

இது போல் பலர் தயாரித்தாலும், உங்களின் தனித்துவம்…

பலரும் இது போன்ற இயற்கை முறையில் சோப்பினை தயாரிக்கிறார்கள். அதை பார்க்க ஒரு வண்ண சோப்பு கட்டிகள் போல்தான் இருக்கும். என்னுடைய சோப்பிலும் இயற்கையான பொருட்கள் இருந்தாலும், அதனை நான் கொடுக்கும் விதம்தான் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தெரிகிறது. என்னிடம் உள்ள சோப்புகள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு பரிசாக வழங்கும்படிதான் அமைத்திருக்கிறேன். கணவன்-மனைவிக்கு, காதலன்- காதலிக்கு, நண்பர்களுக்கு பரிசளிப்பதற்கென்றே பலர் தனித்துவமான சோப்புகளை கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஃப்ளேவரில், எங்குமே கிடைக்காத நவீன டிசைன்கள் மற்றும் விரும்பும் நிறத்தில் கஸ்டமைஸ் செய்து தருகிறேன்.

திருமணம் போன்ற பல்வேறு சுப விழாக்களின் வரிசை தட்டுகளில் கண்களை கவரும் அழகிய வடிவ சோப்புகளை பார்க்கும் போது அதனை தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட சிரமங்கள் அனைத்தும் மறந்து போகும். சிலர் இந்த சோப்புகளை ரிட்டர்ன் கிஃப்ட்டாக வாங்கி செல்கிறார்கள். கொஞ்சம் ஆர்வம், நிறைய உழைப்பு இருந்தால் போதும் நம் பொருட்கள் தனித்தன்மை நிறைந்ததாக மிளிரும். தற்போது 44 வகை சோப்புகளை தயாரித்து தருகிறேன். நலங்கு மாவு மற்றும் 23 வகை மூலிகைகள் கொண்டு நான் தயாரிக்கும் சோப்புகளை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம்.

சோப்புகள் மட்டுமில்லாமல் எங்களின் பாடி பட்டர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம். பாடி ேலாஷன், மாய்சரைசர் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பாடி பட்டர்னு பலர் என்னிடம் கேட்கிறார்கள். இது நம் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளும். சியா பட்டர், கோக்கும் பட்டர், கோகோ பட்டர், மேங்கோ பட்டர் என நான்கு வகைகளில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், பாதம் ஆயில்களை சேர்த்து குறிப்பிட்ட ஒரு அளவில் காய்ச்சி குளிர வைத்தால் திக்கான கிரீம் போல் இருக்கும்.

இதற்கு வாசனைக்காக ரோஜா அல்லது காபி எசன்ஷியல் எண்ணெய்களையும் சேர்த்து தருகிறேன். கிட்டத்தட்ட மாய்சரைசிங் லோஷன் கொஞ்சம் அடர்த்தியாக வெண்ணெய் பதத்தில் இருப்பதுதான் பாடி பட்டர். மேலும் இதனை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பும் ஃப்ளேவரில் கஸ்டமைசும் செய்து தருகிறேன்.

கேசப் பராமரிப்புக்கு 45 மூலிகைகள் கொண்ட ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கிறோம். இதற்கு சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துகிறோம். மேலும் 15 வகை மூலிகைகள் கொண்டு இரண்டு வகையான ஹெர்பல் ஷாம்புகள் மற்றும் சோயா பாலில் கண்டிஷனரும் எங்களிடம் உள்ளது.

எதிர்கால திட்டங்கள்…

அழகியல் என்பது பெரிய கடல். இதில் பல முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்ப நான் என்னை தயார் செய்து கொள்ளணும். அதனால் தற்போது காஸ்மெடாலஜி குறித்து படிக்க இருக்கிறேன். அதன் பிறகு நவீன வகை காஸ்மெடிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. ஷாம்புவில் புதிய ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகிறேன். கெராடின் மற்றும் போடாக்ஸ் செய்துள்ளவர்களுக்கும் ஹெர்பல் ஷாம்பூவினை தயாரிக்க உள்ளேன். முகம் மற்றும் தலைமுடிக்கான சீரமும் என்னுடைய லிஸ்டில் இருக்கிறது. இதனை தொடர்ந்து காஸ்மெடிக்ஸ் குறித்த பயிற்சி வகுப்புகளும் எடுக்க இருக்கிறேன்.

பெண் தொழில்முனைவோருக்கு உங்களின் அட்வைஸ்…

நான் அனைவருக்குமே ஒன்றை மட்டும்தான் சொல்ல விரும்புகிறேன். ஒரு பெண் சொந்தமாக தொழில் துவங்கி சுயமாக நிற்க விரும்பினால் அவளுக்கு உறுதுணையாக பக்கபலமாக இருங்கள். பெண்கள் உயர்ந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு உயரும். பெண்கள் தங்களுக்கு என ஒரு வேலையோ அல்லது சுய தொழிலை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கான ஆர்வமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு துணிந்து செயல்பட்டால் எத்தொழிலும் உங்கள் வசமாகும்’’ என தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் நித்யா சுப்ரமணியம்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்! appeared first on Dinakaran.

Tags : kumkum dothi ,Nitya Subramaniam ,Chhattisgarh, India ,India ,
× RELATED உன்னத உறவுகள்