×
Saravana Stores

கன்னிப்பூ அறுவடையில் வைக்கோல் விலைவீழ்ச்சி: ஒரு கட்டு ரூ.80க்கு விற்பனை

நாகர்கோவில்: கன்னிப்பூ அறுவடையில் நெல்லிற்கு நல்ல விலை கிடைத்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து ஒரு கட்டு வைக்கோல் ரூ.80க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பறக்கை, தேரூர், சுசீந்திரம், புத்தளம் பகுதி வயல்களில் கடந்த மார்ச் மாதமே கன்னிப்பூ நெல் சாகுபடி பணி தொடங்கியது. மற்ற பகுதிகளில் மே மாதம் தான் சாகுபடி பணி நடந்தது. தோவாளை சானல் உடைப்பு காரணமாக தோவாளை சானலை நம்பியுள்ள வயல்களில் சாகுபடி பணி தாமதமாக தொடங்கியது. பல பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியது.

இதில் மார்ச் மாதம் சாகுபடி செய்யப்பட்ட பறக்கை, சுசீந்திரம், புத்தளம், தேரூர் பகுதியில் நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. இதனை பயன்படுத்தி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பறக்கையில் அறுவடை பணி தொடங்கியது. தற்போது நெல் வியாபாரிகள் நல்ல விலைகொடுத்து நெல்லை வாங்குவதால், அறுவடை செய்யப்படும் நெல் மணிகளை விவசாயிகள் நேரடியாக வியாபாரிகளிடம் கொடுத்து வருகின்றனர். நெல்லின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரு கோட்டை நெல் ரூ.1870 முதல் ரூ.1950 வரை விலைக்கு போகிறது. இந்த விலை நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் விலையை விட அதிகமாகும்.

இதனால் விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொடுக்காமல் வியாபாரிகளிடம் கொடுத்து வருகின்றனர். நெல்லுக்கு ஓரளவு விலை இருக்கும் நிலையில் அறுவடை செய்யப்படும் வைக்கோலுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.80க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர். கடந்த கும்பபூ அறுவடையின் போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.200 முதல் ரூ.250 வரை விலை போனது. அப்போது வைக்கோல் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால் கன்னிப்பூ அறுவடையின்போது வைக்கோலுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

 

The post கன்னிப்பூ அறுவடையில் வைக்கோல் விலைவீழ்ச்சி: ஒரு கட்டு ரூ.80க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Pihalai ,Therur ,Suchindram ,Puttalam ,Kumari ,Dinakaran ,
× RELATED கன்னங்குளத்தில் பொது கழிப்பறை சீரமைப்பு