அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் பாதையில் இருந்த ₹50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
ராமர் கோயிலுக்கு செல்லும் பாதையில் 6,400 வண்ண விளக்குகளும், 96 புரொஜக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் மதிப்பு சுமார் ₹1 கோடி என கூறப்படுகிறது. இந்த விளக்குகளின் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ராமர் பாதையில் வைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனம் ராமஜென்ம பூமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதில், “கடந்த மார்ச் 19ம் தேதி வரை ஆய்வு செய்யும்போது அனைத்து விளக்குகளும் இருந்தன. ஆனால் மே 9ம் தேதி ஆய்வு செய்தபோது 3,400 வண்ண மூங்கில் விளக்குகள், 36 புரொஜக்டர் விளக்குகள் திருடு போயுள்ளன. இதன் மதிப்பு ₹50 லட்சம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்ஜென்ம பூமி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாஜ என்றால் எங்கும் இருள்: அகிலேஷ் தாக்கு
ராமர் பாதையில் விளக்குகள் திருடப்பட்டது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக தாக்கி உள்ளார்.
அகிலேஷ் யாதவ் தன் எக்ஸ் தள பதிவில்,
“அயோத்தியில் திருடர்கள் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்துள்ளனர். அதனால்தான் விளக்குகள் இல்லாமல் மின்கம்பங்கள் நிற்பதாக பொதுமக்கள் ஏற்கனவே கூறி வந்தனர். பாஜ ஆட்சி என்றால் எங்கும் இருள். அதனால்தான் இன்றைய அயோத்தி பாஜ வேண்டாம் என சொல்கிறது” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
The post அயோத்தி ராமர் கோயில் பாதையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விளக்குகள் திருட்டு appeared first on Dinakaran.