×
Saravana Stores

தேனியில் பண இரட்டிப்பு மோசடி; ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் சிக்கியது: 2 பேர் கைது; சொகுசு கார்கள், 17 செல்போன்கள் பறிமுதல்

தேனி: தேனியில் பண இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.40 கோடி கள்ள நோட்டுகள், 2 சொகுசு கார்கள், 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் தவச்செல்வம் (40). இவரிடம் தேனியை சேர்ந்த ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் பழைய ரூ.2 ஆயிரமாக ரூ.20 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய தவச்செல்வம் கடந்த ஜூன் 26ம் தேதி இரவு, தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஆர்.சி சர்ச் அருகே வைத்து ஒரு கும்பலிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற கும்பல், கூறியபடி ரூ.20 லட்சம் தராமல், தவச்செல்வத்தின் செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து தவச்செல்வம் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேனி புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் ஒரு அட்டைப்பெட்டியில் புத்தம் புது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் இருந்த தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர்பாபு(45), பொம்மையக்கவுண்டன்பட்டியை சேர்ந்த கேசவன் (36) ஆகியோரை பிடித்து தேனி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சேகர்பாபு, கேசவன் உள்ளிட்ட கும்பல், பண இரட்டிப்புக்காக வருபவர்களிடம் இருந்து ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தராமல் மோசடியில் ஈடுபட்டதும், தவச்செல்வத்திடம் பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டனர்.

சோதனையில் ரூ.15 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், பண இரட்டிப்பு மோசடிக்காக கலர் ஜெராக்ஸ் மூலம் அச்சிடப்பட்ட ரூ.3 கோடியே 40 லட்சம் கள்ளநோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 17 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரே எண் கொண்ட 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை தேடி வருகின்றனர்.

The post தேனியில் பண இரட்டிப்பு மோசடி; ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் சிக்கியது: 2 பேர் கைது; சொகுசு கார்கள், 17 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Honey ,Teni ,Theni ,Thawachelvam ,Chennai Avadi ,Dinakaran ,
× RELATED தமிழக ராணுவ வீரர் ராஜஸ்தானில் வீர மரணம்