×

நிர்வாக பிரச்னையால் நீண்ட இழுபறிக்கு பின் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்: டிக்கெட் விலை ₹5,000 முதல் ₹7,000 வரை நிர்ணயம்

நாகப்பட்டினம்: நிர்வாக பிரச்னையால் நீண்ட இழுபறிக்கு பின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று (16ம் தேதி) முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது.

இந்தியா இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாட்களை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது இரண்டு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின் பலமுறை கப்பல் சேவையை இயக்க முயற்சித்தும் நிர்வாக பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் இன்று (16ம் தேதி) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு செல்லும். நாளை (17ம் தேதி) காலை காங்கேசன் துறையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 2 மணிக்கு வரும். வருகிற 18ம் தேதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். அதே நாள் மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும். இதைத்தொடர்ந்து இரண்டு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் சேவை நடைபெறும்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் கூறுகையில், ‘கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயணிகளின் சிரமம் இல்லாமல் பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ₹7 ஆயிரத்து 500ம், சாதா இருக்கைக்கு ₹5 ஆயிரம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.

அதேபோல அனைத்து பயணிகளுக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும்.சிவகங்கை கப்பல் பயணம் இந்தியா- இலங்கை இடையே நல்லுறவுக்கான பாலமாக இருக்கும். கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருகை தர வேண்டும். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் பயணிகள் கப்பலில் ஏற்றப்பட்டு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்’ என்றார்.

The post நிர்வாக பிரச்னையால் நீண்ட இழுபறிக்கு பின் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்: டிக்கெட் விலை ₹5,000 முதல் ₹7,000 வரை நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Nagai-Sri Lanka ,Nagapattinam ,Kangesanturai, Sri Lanka ,India ,Sri Lanka ,Nagai ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை...