×

விபத்தில் சிக்கியவர்களின் நகையை மீட்டு ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் லாரி மீது பைக் மோதியது

வேலூர், ஆக.15: வாலாஜா அருகே விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்துடன், அவர்களது தங்க நகைகளையும் கண்டெடுத்து ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களை மருத்துவர்களும், பொதுமக்களும் பாராட்டினர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்(35). இவரது மனைவி மோகனபிரியா(30), மகள் யாஷிகா(3). இவர்கள் 3 பேரும் நேற்று காலை பைக்கில் ஆற்காட்டிலிருந்து சோளிங்கர் நோக்கி சென்றனர். மாந்தாங்கல் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இதுபற்றி தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பிரசாந்த், மருத்துவ உதவியாளர் கிரிஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் மோகனபிரியாவுக்கு மயக்கம் தெளிந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவர்களின் 6 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையை மருத்துவர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் சிக்கியவர்களின் நகையை மீட்டு ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் லாரி மீது பைக் மோதியது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Valaja ,Ranjit ,Pandianallur village ,Ranipettai District Solinger ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...