×

அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா 2040ல் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேச்சு

ஈரோடு: இந்தியா 2040ல் அறிவியல் முன்னேற்றத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கும் என்று விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறினார். தமிழ்நாடு அரசு, தனியார் அமைப்பு இணைந்து நடத்திய ஈரோடு புத்தக திருவிழாவின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை பேசியதாவது: படிக்க படிக்க தான் அறிவு வளர்ச்சி பெறும். கற்றல் சிந்தனையை, அறிவை தூண்டும். புத்தகங்கள் நமது அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவைப்படுகிறது.

நாம் முன்னேறும்போது, பல இடையூறுகள் வரும். அதை எதிர் கொள்வது எப்படி என்பதை புத்தகங்கள் எடுத்து கொடுக்கும். புத்தகங்களை படிப்பதன் மூலம் அறிவு சார்ந்த நாடாக மாற்ற முடியும். உலகளவில் வளர்ந்த, முன்னேறிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தான் ஆரம்ப காலங்களிலேயே அறிவியல், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் என அனைத்தும் வளர்ந்து காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் 1500ம் ஆண்டுக்கு பின்னர்தான் முன்னேற துவங்கினர். நாம் சந்திரயான் அனுப்பினோம். விரைவில் சந்திரயான்-4 அனுப்ப உள்ளோம்.

அப்போது, விண்ணில் இருந்து மாதிரிகளை நாம் எடுத்து வருவோம். விண்வெளி ஆய்வில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. வருகிற 2040ம் ஆண்டில் சந்திரனில் இந்தியா ஒரு இன்டஸ்டிரியை நிறுவ உள்ளது. அங்குள்ள ‘ஹீலியம் 3’ஐ எடுத்து வரும்போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும். ஹீலியம் 3ல் இருந்து வெளிச்சம், வெப்பம் கிடைக்கும். யுரேனியமும், அதற்கு இணையானது. அது, இந்தியாவில் கிடைக்கவில்லை. உலகளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. யுரேனியத்தைவிட ஹீலியம் 3, 100 மடங்கு சக்தி, பாதுகாப்பு அம்சம் கொண்டது. 2040ல் விண்வெளிக்கு ஆட்கள் பயணம் செய்வார்கள்.

The post அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா 2040ல் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Sivathanupillai ,Erode ,Erode Book Festival ,Government of Tamil Nadu ,A. Sivathanupillai ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...