×

புர்ஃகா (தமிழ்)

குடும்ப பெண் ஒருத்தி ஒரு நாள் இரவு சும்மா ஜாலிக்காக ஒரு ஆண்மகனுடன் உறவு கொண்டு வந்ததை ‘லட்சுமி’ என்ற குறும்படமாக எடுத்து பரபரப்பு கிளப்பியவர் சர்ஜூன் கே.எம். அதன்பிறகு நயன்தாரா நடித்த ‘ஐரா’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன் பிறகு தற்போது இயக்கி உள்ள படம் ‘புர்ஃகா’. ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நஜ்மா (மிர்னா) திருமணமான சில வாரங்களிலேயே கணவன் இறந்து விட இஸ்லாமிய மத வழக்கப்படி ‘இத்தா’ கடைபிடிக்கிறார் (சில மாதங்கள் வரை வெளி ஆண்களை சந்திக்காமல் இருப்பது). இந்த சமயத்தில் ஒரு மத கலவரத்தில் பலத்த காயம் அடைந்த சமூக போராளியும், நாத்திகருமான சூர்யா (கலையரசன்) நஜ்மாவின் வீட்டுக்குள் அடைக்கலம் கேட்டு நுழைகிறார். நர்சிங் படித்த நஜ்மா மனிதாபிமான அடிப்படையில் சூர்யாவுக்கு உதவுகிறார். அந்த ஒரு நாள் இரவில் இவருக்கும் இடையில் நடக்கும் தர்க்க ரீதியிலான உரையாடல்கள்தான் படம்.

ஒரே வீடு, இரண்டு கேரக்டர்களின் உரையாடல் மேலும் சில காட்சிகளை கொண்டு ஒரு டாக்குமெண்டரி பாணியிலான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். பாலமுருகனின் ஒளிப்பதிவும், சிவாத்மிகாவின் பின்னணி இசையும் அதை திரைப்படமாக மாற்றித் தருகிறது.

இயக்குனர் சார்ஜூன் கான்ட்டரவர்சி கன்டென்டில் படம் எடுத்து அதனை விவாதப் பொருளாக்கி அதன்மூலம் தன் படத்தை கவனிக்க வைக்கிறவர். அது ஒன்றையே மூலதனமாக்கி இந்த படத்தையும் தந்திருக்கிறார். தியேட்டரில் வெளியிட்டால் வெளியீட்டுக்கு பிரச்சினை வரலாம் என்று ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

கணவனை இழந்த இஸ்லாமிய பெண்கள் இத்தா இருப்பதற்கான காரண காரியங்கள் பற்றி விவாதிக்காமல், எல்லா மதத்திலும் பெண்ணடிமைத்தனம் இருப்பதை போன்று இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைத்தனம் இது என்கிற பொருளையே படம் தாங்கி நிற்கிறது. நாடக பாணியிலான இந்த படம் சில விவாதங்களை உண்டாக்கலாம்.

ஆனால் ஒரு திரைப்படமாக ரசிகனுக்கு காட்சியனுபவத்தை தரவுமில்லை. ஒரு படைப்பாக தெளிவான பார்வையுடனும் இல்லை. போதாக் குறைக்கு ஒரே இரவில் அறிமுகமில்லாத இளைஞனுடன் காதல் பூப்பது போன்று சித்தரித்திருப்பது அபத்தம். படத்தின் ஒரே ஆறுதல் கலையரசன், மிர்னாவின் நேர்த்தியான நடிப்பு.

The post புர்ஃகா (தமிழ்) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarjun K.M. ,Nayanthara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்