×

சம்பா தாளடி பயிரில் மஞ்சள் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண் அதிகாரி விளக்கம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி 36 ஆயிரத்து 383 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சம்பா பயிர் வளர்ச்சி தருணம் முதல் கதிர் வெளிவரும் தருணம் வரை உள்ளது. தாளடி பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. சமீபத்தில் பெய்த பெருமழையினால் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் தற்போது அதிகமாக பனி பொழிவதாலும் இரவில் குளிர் அதிகமாக இருப்பதாலும் பூஞ்சாணம் நோய்கள் மற்றும் பாக்டீரியா நோய்கள் தாக்குதல் பரவலாக தென்படுகிறது.பூஞ்சணாத்தாலும் பாக்டீரியாவினாலும் பாதிக்கப்பட்ட நெற்பயிரில் தோகைகள் மஞ்சளாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இந்நோயினை மஞ்சள் நோய் என்று அழைக்கிறார்கள். இது பாக்டீரியா இலைக் கருகல் நோய் இந்நோய் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. அத்துடன் இலைப்புள்ளி நோயும் சேர்ந்தது பாதிப்பின் தீவிரம் அதிகமாகி வயல் முழுவதும் மஞ்சளாக காணப்படுகிறது. இதனால் இலையின் பச்சையம் இல்லாததால் சூரிய ஒளியை கொண்டு ஒளிச்சேர்க்கை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் பயிர்களில் கதிர்கள் வாலிப்பாக வராமல் மகசூல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும். ஏக்கருக்கு அரை கிலோ சூடோமோனாஸ் எதிர் உயிரி பூசனம் சாணி பாலில் கலந்து அத்துடன் 200 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நோயின் ஆரம்பநிலையில் இந்த முறை நல்ல பாதுகாப்பு தரும் எனினும் நோயின் தீவிரம் அதிகமாகிவிட்டால் ரசாயன நோய்த்தடுப்பு முறைகளை கையாள வேண்டும். இதன்படி ஒரு ஏக்கருக்கு 250 மில்லி ஹெக்சா போனாசால் மருந்தினை 50 கிராம் பிளான்டோ மைஷின் மருந்துடன் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.நோயை கட்டுப்படுத்த தவறினால் மகசூல் இழப்பு ஏற்படும். மேலும் நெல் மணிகளில் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டு நெல்லின் தரம் குறையும் என்பதால் விவசாயிகள் உடனடி கவனம் செலுத்தி மருந்து தெளிக்க வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்….

The post சம்பா தாளடி பயிரில் மஞ்சள் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Samba ,Chaminathan ,Thiruvarur District ,Thiruthirupundi ,Thaladi ,Thiruvaruvundi ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை