×
Saravana Stores

தாமதமாக மாத சம்பளம் வழங்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்: புதுப்பட்டினத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் ஊராட்சியில் தாமதமாக மாத சம்பளம் வழங்குவதை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 14 பேர் தூய்மையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, வழங்கப்படும் இவர்களது மாத சம்பளம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஊராட்சி அளவிலான சுயஉதவி குழு கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்டு, கூட்டமைப்பினர் சம்மந்தப்பட்ட தூய்மை பணியாளரின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகம் மாத முதலிலேயே சம்பளத்தை சுயஉதவி குழு கூட்டமைப்புக்கு அனுப்பியும், கூட்டமைப்பினர் தொடர்ந்து மாத சம்பளத்தை மிகவும் தாமதமாக வங்கியில் செலுத்துவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருவதால், சம்பளத்தை மாத ஆரம்ப நாட்களிலேயே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள், நேற்று புதுப்பட்டினம் இசிஆர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால், மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ‘மாத சம்பளத்தை மாத முதலிலேயே வழங்க உரிய ஏற்பாடு செய்கிறேன்’ என கேட்டு கொண்டதன்பேரில் தூய்மை பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், இசிஆர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தாமதமாக மாத சம்பளம் வழங்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்: புதுப்பட்டினத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pudupatnam ,riots ,Thirukkalukkunram ,Pudupatnam panchayat ,Tirukkalukunnam Union ,Pudupattinam ,
× RELATED மழையால் வல்லிபுரம், வாயலூர்...