×

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பல்லாவரம் அருகே நடந்தது

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழவுநீர் ஏரி, குளங்களில் கலக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், பல்லாவரம், கீழ்கட்ளை பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுகிறது.

அத்துடன், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தாம்பரம் மாநகராட்சி நகராட்சி நிர்வாகம் முறையாக செய்வதில்லை எனக்கூறி பல்லாவரம் ரயில் நிலையம் அருகே பல்லாவரம் பகுதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை பல்லாவரம் பகுதி செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் வரவேற்பு வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், மாவட்ட பொருளாளர் பரசுராமன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு அதிமுக சார்பில் உரிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்காததால், வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் தண்ணீர் தாகத்தில் தவிப்பதை காண முடிந்தது.

உரிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் அவசர தேவைக்கு கூட ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கூட்டங்கள் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே காலி மைதானத்தில் நடைபெறுவது தான் வழக்கம்.  இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.

ஆனால், முதல்முறையாக பல்லாவரம் ரயில் நிலையம் வேம்புலி அம்மன் கோயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலை விதிமுறைகளை மீறி சாலையின் நடுவே பேரிகாட் அமைத்து இருந்ததால், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக பழைய பல்லாவரம் செல்லும் கனரக வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பல்லாவரம் அருகே நடந்தது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tambaram Corporation ,Pallavaram ,Amma ,Kilikatlai ,Dinakaran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு...