×

பாதுகாப்பான நிதி பரிவர்த்தனை குறித்து பார்வையற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல மையத்தில், சென்னை இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலகம் சார்பில் வங்கிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை பாதுகாப்புடன் செயல்படுத்தும் முறைகளைப்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நமது வாழ்வின் ஒரு பகுதியாக டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் ஒரு பெரும் அங்கமாக வளர்ந்து வருகிறது.

இது வாடிக்கையாளர் வசதியை அதிகரிப்பதுடன் நமது தேசத்தின் கொள்கையான நிதி உள்ளடக்கத்தையும் ஊக்குவிக்கிறது. ஆனால் இப்பரிவர்த்தனைகளில் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் தங்கள் பணத்தை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலகம் மக்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல அலுவலர் ஆர். ஸ்ரீபிரியா தலைமை தாங்கினார். ஆராய்ச்சி அலுவலர் தாகூர் முன்னிலை வகித்தார். இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலத்தின் அதிகாரிகள் ரிச்சர்ட் கரோ, ராகவானந்தம் மற்றும் ஸ்ரீதர் ராவ் ஆகியோர் வங்கிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை பாதுகாப்புடன் செயல்படுத்தும் முறைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும், நமக்கு தெரியாதவர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது, நம்முடைய கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்களை) அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய புகார்களை பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் இம்மண்டல மையத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் பல்வேறு சந்தேகங்களை ரிசர்வ் வங்கி அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நிதி பரிவர்த்தனைகளை பாதுகாப்புடன் செயல்படுத்தும் முறைகளைப் பற்றிய கையேடுகளை வழங்கினார்கள். வினாடிவினா போட்டி நடத்தப்பட்டு வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பரிசுகளை வழங்கினார்கள்.

 

The post பாதுகாப்பான நிதி பரிவர்த்தனை குறித்து பார்வையற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Poontamalli ,National Center for the Development of the Blind and Disabled ,RBI Grievance Adjudicator's Office ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் அந்நியச் செலாவணி...