×

சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் தொங்கும் கேபிள்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் தொங்கும் கேபிள்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் இன்று குடிநீருக்கு அடுத்தபடியாக மிக அத்தியாவசியமானதாக இணைய சேவை உள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இணைய சேவை இன்றி இயங்கவே முடியாது. அதேபோல் கேபிள் டிவி சேவையும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இவ்விரண்டும் பெரும்பாலும் கேபிள்கள் வழியாகவே வீடுகள், அலுவலகங்களை சென்றடைகின்றன.

இந்த கேபிள்களை உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படுத்தும் திட்டம் எதுவும் வகுக்காததால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கேபிள்கள் வலைப்பின்னல்கள் போன்று பின்னிப் பிணைந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்கள் தங்கள் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்களை சுமார் 5 ஆயிரம் கி.மீ நீளத்துக்கு மேல் நிறுவியுள்ளன. அவற்றிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்லும் கேபிள்கள் அனைத்தும் மாநகராட்சியின் சாலையோர தெருமின் விளக்கு கம்பங்களையே நம்பியுள்ளன.

ஒருசில பெறுநிறுவனங்கள் சொந்தமாக கம்பங்களை அமைத்துக் கொள்கின்றன. இந்நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வாடகை மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பல நிறுவனங்கள் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று கேபிள்களை நிறுவுகின்றன. சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவுவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இணைய சேவை மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பதால், விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவுவதில்லை.

பல இடங்களில் இந்தக் கேபிள்கள் ஆபத்தான முறையில், பாதசாரிகளின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, மின்ட் சாலை, எல்லிஸ் சாலை, பாந்தியன் சாலை உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மாநகராட்சி மின் விளக்கு கம்பங்களில் மூலமாக ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வழியே உயரமான கனரக வாகனங்கள் ஏதேனும் செல்லும் போது கேபிள்கள் அறுந்து தொங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அண்மையில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் தொங்கிய கேபிள் ஒன்று, வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவரின் கழுத்தில் பட்டு விபத்தையும், கழுத்தில் காயத்தையும் ஏற்படுத்தியது.

மாநகரப் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள்களை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கும் கேபிள்கள் அகற்றப்படுகின்றன. மாநகராட்சிக்கு புகார் வந்தால், எந்த கிழமையாக இருந்தாலும் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. தற்போது கேபிள்களுக்கென சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கேபிள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கேபிள்களை அகற்ற கூடுதல் பணியாளர்களும், வாகனங்களும் அனுப்பப்பட்டு வருகிறது.” என்றனர்.

The post சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் தொங்கும் கேபிள்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Area ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...