ஆர்.கே.பேட்டை, ஆக. 12: ஆர்.பே.பேட்டை அருகே கீழ் பாலாபுரம் கிராமத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த பொன்னியம்மன் கோயில் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றது. இதனையடுத்து கும்பாபிஷேக விழாவையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் மற்றும் கிராம வீதிகள் மின் விளக்குகளால் ஜொலித்தன. திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதில் 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் சிறப்ப்உ பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று காலை மேள தாளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
இதேபோல், பொன்னியம்மன் கோயில் அருகில் உள்ள முனீஸ்வரர் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.வி.தென்னரசு உட்பட முக்கிய பிரமுகர்கள், கீழ் பாலாபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
The post ஆர்.கே.பேட்டை அருகே பொன்னியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.