×

மாதவரத்தில் 150 ஏக்கரில் அமைய உள்ள ஹைடெக் சிட்டிக்கு விரைவில் டெண்டர்: டிட்கோ முதற்கட்ட ஆய்வு

திருவொற்றியூர்: மாதவரத்தில் 150 ஏக்கரில் அமைய உள்ள ஹைடெக் சிட்டிக்கு விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளது. இதையொட்டி, டிட்கோ முதற்கட்ட ஆய்வு பணிகளை முடித்துள்ளது. மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை துறைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எஞ்சியுள்ள பகுதிகளில் ஏராளமான காலி நிலங்கள் இருப்பதால், இங்கு ஹைடெக் சிட்டி உருவாக்க வேண்டும், என்று மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாதவரம் பால்பண்ணை பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் ஹைடெக் சிட்டி அமைப்பதற்காக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) முதற்கட்ட ஆய்வு நடத்தியுள்ளது.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நகரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா, உலகளாவிய திறன் மையம், மேம்பாட்டு மையம் ஆய்வகம், தங்கும் விடுதி, வணிக வளாகம் பொழுதுபோக்கு வசதி, அனைத்து அம்சங்களுடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.

விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. வட சென்னைக்கு உட்பட்ட மாதவரத்தில் தகவல் தொழில் நுட்ப நகரம் என்கின்ற ஹைடெக் சிட்டி அமைவதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பும், சுற்று வட்டாரத்தில் வியாபாரம் மற்றும் பிற தொழில் வளமும் பெருகும் என தொழில் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாதவரம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம், தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வாகன போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் இருப்பதால் இந்த ஹைடெக் சிட்டி மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் வடசென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்,’’ என்றனர்.

The post மாதவரத்தில் 150 ஏக்கரில் அமைய உள்ள ஹைடெக் சிட்டிக்கு விரைவில் டெண்டர்: டிட்கோ முதற்கட்ட ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,DITCO ,Tiruvottiyur ,Aavin ,Dinakaran ,
× RELATED மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில்...