×

சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய பி.இ. பட்டதாரி பெண் கைது: 15 மணி நேரத்தில் மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய இன்ஜினியரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலாவுக்கு (25) சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் கடத்திச் சென்றுள்ளார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியது சேலம் அடுத்த காரிப்பட்டி நேரு நகரை சேர்ந்த வினோதினி (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வினோதினி இன்ஜினியரிங் படித்து, அம்மாபேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் அலுவலக பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சியை சேர்ந்த அகிலனுக்கும் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமானார்.

ஆனால் கடந்த மே மாதத்தில் கரு கலைந்துவிட்டது. இதனை உறவினர்களிடம் சொல்லவில்ைல. அதனால் வினோதினிக்கு வளைக்காப்பும் நடத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தை பிறந்ததாக காட்டிக்கொள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கடத்தியுள்ளார். குழந்தைக்கு உடல்நலமில்லை என்பதால், தான் கர்ப்பமாக இருந்தபோது சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார். அவர் காரிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு நர்சுகள் சந்தேகத்தில் விசாரித்தபோது, சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட தகவல் வெளியானது. இதையடுத்து காரிப்பட்டி போலீசார் வினோதினியை பிடித்து குழந்தையுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரித்தபோது, கர்ப்பம் கலைந்ததால் குழந்தை ஏக்கத்தில் தப்பு செய்துவிட்டேன் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து வினோதினியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட 15 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

* பிரசவ வார்டில் அனுமதிக்க ரூ.100 லஞ்சம்: பெண் ஊழியர் வீடியோ வைரல்
சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்டல் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், பணத்தை பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. குழந்தை கடத்தப்பட்ட அதேநாளில், அந்த வீடியோவை வாலிபர் ஒருவர் எடுத்துள்ளார்.

அந்த நபருக்கு பிறந்த குழந்தையை பார்க்க வந்த உறவினர், உள்ளே செல்ல முதலில் பெண் ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிறகு ரூ.100 கொடுத்தவுடன், உள்ளே அனுமதித்துள்ளார். குழந்தை கடத்தலுக்கு இதுவே காரணம் என அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பெண் ஊழியர் மீது நடவடிக்கை பாயும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* தாய் வாங்கிய கடனுக்கு சிறுமியை கடத்திய நிதி நிறுவன அதிபர் கைது
நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜ் நகரை சேர்ந்தவர் மரியசந்தியாகு டென்னிஸ் (33). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திசையன்விளையை சேர்ந்த அனுஷா ஜிஜி ரோஸ் (25) பணியாற்றி வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 6 வயதான மூத்த மகள் 1ம் வகுப்பு படிக்கிறாள். நிதி நிறுவனத்தில் அனுஷா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். வட்டியை செலுத்தாததால், நிதி நிறுவன அதிபர் நெருக்கடி கொடுத்துள்ளார்.

சம்பள பணத்தில் வட்டியை கழிக்கும்படி கூறியும் கேட்காமல் அனுஷா வீட்டுக்கு நிதி நிறுவன ஊழியர்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அவரது மூத்த மகளை பள்ளிக்கு சென்று தனது வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அனுஷா புகாரின்படி திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி மரியசந்தியாகு டென்னிசை கைது செய்து சிறுமியை மீட்டனர். வட்டிக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக மரியசந்தியாகு டென்னிஷ் கொடுத்த புகாரின் பேரில் அனுஷாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

 

The post சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய பி.இ. பட்டதாரி பெண் கைது: 15 மணி நேரத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : B.E. ,Salem Government Hospital ,Salem ,Thangadurai ,Pallipalayam ,Namakkal district ,Vanilla ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில்...