×

பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு

*மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி : தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

விழாவில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2007ம் ஆண்டு முதல் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பூர்வீக குடிகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டிக்கான கருப்பொருள் நிர்ணயத்திற்கான முகவர்களாகும் பூர்வீக குடி இளைஞர்கள் தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிகுடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக்குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள் உலகளாவிய நிலையில் 37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் 702 பழங்குடி இனங்கள் மலைகள், வனங்கள், சமவெளிகள், தீவுகளில் பழங்காலத் தன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். 1961ல் நடந்த கணக்கெடுப்பில் நாட்டில் 1100 மொழிகள் இருந்தன. 2001ல் அது 850 ஆகக் குறைந்தது. 250க்கும் மேற்பட்ட மொழிகள் மறைந்தே போயின. பல்வேறு பழங்குடியின மொழிகள் அழிவை நோக்கி செல்கின்றன.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மலைவாழ் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் மேற்கொண்டதின் விளைவாக கோத்தகிரி அருகில் உள்ள சோலூர்மட்டம் தும்பி பெட்டுப்பகுதி பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பழங்குடியினருக்கு 100 சதவீதம் ெகாரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். தமிழ்நாட்டில் பல்வேறு நிலையில் பின்தங்கிய மிக ஆறு முற்கால பழங்குடியின மலைவாழ் மக்கள் உட்பட்ட 7.94 லட்சம் மலைவாழ் மக்கள் மாநிலம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றனர். இந்த மலைவாழ் மக்களின் சுகாதார நல்வாழ்வு மேம்பாட்டிற்காக மருத்துவத்துறை பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று ஹீமோகுளோபினோபதி தடுப்பு திட்டம்.

ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் உயிர் காக்கும் உயர்ரக மருந்துகள் வழங்கும் திட்டம் கொல்லி மலையில் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 1.21 லட்சம் ஹீமோகுளோபினோபதிக்கான மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 9 சதவிகித நபர்களுக்கு நோய் கடத்தும் தன்மையுடையவர் என கண்டறியப்பட்டது. 78,949 பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு ஜூன் 2024 வரை பரிசோதனை செய்யப்பட்டு, இந்திய அளவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கின்றது.

தமிழ்நாட்டில் பழங்குடியினர் வசதிக்கும் அடிவாரப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பழங்குடியினருக்காக பிரத்யேக பிரசவ கால காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 794 பழங்குடியின கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் பழங்குடி மக்களின் வாழ்விடங்களை உயர்த்தி அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1000 பழங்குடியினர் இன இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசினார்.

இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், சமூகநீதி மற்றும் மனித உரிமை தலைவர் சாமுண்டீஸ்வரி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக பொது மேலாளர் அசோக்குமார், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார், நகரமன்றத்தலைவர்கள் வாணீஷ்வரி, பரிமளா, குன்னூர் நகரமன்ற துணைத்தலைவர் வசீம்ராஜா, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் கீர்த்தனா, திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், ராஜேந்திரன், விசாலாட்சி, பழங்குடியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Minister of Public Welfare ,Tamil Nadu ,MLA ,Subramaniam ,Nilgiri District Administration ,Department of Forestry ,Dinakaran ,
× RELATED பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000...