விருத்தாசலம், ஆக. 10: விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேட்டு தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த கால்வாய் பணியை கட்ட கூடாது என வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் தனக்கோடி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேட்டு தெருவில் கட்டப்படும் கழிவுநீர் கால்வாயை அப்பகுதியில் உள்ள வேளாண் குளத்தில் விடுவதள்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிக்கூடம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதாலும் கழிவு நீர் கால்வாயின் கழிவு நீரை வேளாண் குளத்தில் விடப்படுவதாலும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். மேலும் ஏற்கனவே இப்பணி மேற்கொள்ளப்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் கைவிடப்பட்டது. ஆனால் மீண்டும் அந்தப் பணி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும், என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மீண்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். அல்லது விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கூறிவிட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post கால்வாய் கட்ட எதிர்ப்பு ஊராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.