×
Saravana Stores

3 நாட்களாக டெல்லியில் முகாமிட்ட நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் உத்தவ் முதல்வர் வேட்பாளரா?: சோனியாவை நேரடியாக சந்தித்து பேசியதால் பரபரப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா தேர்தலில் உத்தவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் சோனியாவை நேரடியாக சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், சிவசேனா (உத்தவ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். இறுதி நாளான நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோரை சந்தித்து பேசினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

அதன்பின் தனது மனைவி மற்றும் மகன் ஆதித்ய தாக்கரேயுடன் சென்று காங்கிரஸ் நடாளுமன்ற தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். சோனியா காந்தியுடனான சந்திப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்லாது குடும்ப சந்திப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது சரத் பவாரோ அல்லது காங்கிரஸ் தலைவர்களோ உடனிருக்கவில்லை. இச்சந்திப்பின் மூலம் சோனியா காந்தி குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டதோடு நேரடி தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டார். எதிர்காலத்தில் கூட்டணி தொகுதி பங்கீட்டில் எதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், சோனியா காந்தியிடம் நேரடியாக இனிமேல் உத்தவ் தாக்கரேயால் பேச முடியும் என்று கூறுகின்றனர்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார். தேர்தல் அறிக்கையை மகாவிகாஷ் அகாடியின் மூன்று கட்சிகளும் சேர்ந்து தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தன்னை மகாவிகாஷ் அகாடியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், தேர்தலுக்கு பிறகுதான் முதல்வர் யார்? என்பது முடிவு செய்யப்படும் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. அதனால், முதல்வர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதேபோல் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ளதால், மகாராஷ்டிரா பேரவை தேர்தல் அடுத்தடுத்த திருப்பங்களை தரவுள்ளது. அதேநேரம் ஆளும் பாஜக – ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூங்களை வகுத்து வருகிறது.

 

The post 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்ட நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் உத்தவ் முதல்வர் வேட்பாளரா?: சோனியாவை நேரடியாக சந்தித்து பேசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Uthav ,Maharashtra ,Delhi ,Sonia ,NEW DELHI ,UTAV ,Sivasena ,First Minister ,Uddhav Thackeray ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு