- நீரஜ் சோப்ரா
- பாரிஸ் ஒலிம்பிக்
- பாரிஸ்
- 33வது கோடைகால ஒலிம்பிக்
- பிரான்ஸ்
- இந்தியர்கள்
- இந்தியா
- டோக்கியோ ஒலிம்பிக்
- அர்ஷத் நதீம்
- பாக்கிஸ்தான்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது கோடைகால ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியர்கள் மிகவும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று நேற்றிரவு நடந்தது. டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்ட 12 வீரர்கள் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்ததால் நீரஜ் சோப்ரா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ராவும், பாகிஸ்தான் வீரர் நதீமும் ஃபவுல் செய்தனர். 2வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் வீசினார். பாகிஸ்தான் வீரர் நதீம், 92.97 மீட்டர் எறிந்தார். இது புதிய ஒலிம்பிக் சாதனையாகவும் அமைந்தது. இதற்கு முன் நார்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் 90.57 மீட்டர் தூரம் எறிந்தது தான் ஒலிம்பிக்கில் சாதனையாக இருந்தது. புதிய சாதனையுடன் பாகிஸ்தான் வீரர் தங்கம் வென்ற நிலையில், நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றார். கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீடடர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 3வது இடம் பிடித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற 4வது இந்தியர் என்ற சிறப்பை நீரஜ் பெற்றுள்ளார்.
இதற்கு முன் மல்யுத்த வீரர் சுஷில் குமார், பேட்மிண்டன் பி.வி.சிந்து, நடப்பு ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் 2 பதக்கங்கள் வென்றுள்ளனர். அதேநேரத்தில், தடகளத்தில், அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அர்ஷத் நதீம், 1992ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கிற்கு பிறகு பாகிஸ்தானுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். தெற்காசிய நாட்டிலிருந்து 3வது தனி நபர் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, “வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து 2 ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்’’ எனவும், பிரதமர் மோடி, “நீரஜ் சோப்ரா அவரது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி உள்ளார். மற்றொரு ஒலிம்பிக் வெற்றியுடன் அவர் திரும்புகிறார் என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்தியா. வெள்ளி வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்’’ எனவும் தெரிவித்துள்ளனர்.
The post பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை appeared first on Dinakaran.