×

தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவர்களிடையே பருவ மழை குறித்த விழிப்புணர்வு

ஊட்டி : நீலகிரியில் தேசிய பசுமைப்படை, பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும்,அதன் அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தாளாளர் முனைவர் பெரியநாயகம் தலைமை தாங்கி பேசுகையில்: மாணவர்கள் பருவ மழை காலங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். இயற்கை தாவர வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளும் காலமாகும்.

பழமரங்கள், மூலிகைத் தோட்டம்,நம் வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயம் போன்ற இயற்கை பனிகள் தொடங்க சிறந்த காலமாகும்.மழைக்காலத்தை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் மழைநீர் சேமிப்பு போன்ற சிறப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில்: இந்திய புவியியல் ஆய்வு மையம் தேசிய அளவில் நீலகிரி மாவட்டம்,டார்ஜிலிங் பகுதிகளை மண் சரிவு, காலநிலை மாற்றம் போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும், இதன் புள்ளி விவரங்கள் சேகரிப்பதிலும் களப்பணிகளில் பல்வேறு தகவல் சேகரிப்பு அடிப்படையில் தொடங்கப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் மூலம் ஆபத்தான பகுதிகள் கண்டறிந்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் மழைக் காலங்களில் அரசுக்கு உதவும் வகையில் மாணவர்கள் தகவல்களை அளிப்பதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.

அங்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகளுக்கு மாணவர்களின் பங்கு மிக அவசியமாக உள்ளது.சமூக வலை தளத்தில் மக்களை பயமுறுத்தும் தவறான தகவல்களை அளிக்காமல் சரியான அறிவுபூர்வமான செய்திகளை மாணவர்கள் பகிர்வது அவசியம்.வசிப்பிடங்களில் கால்வாய்களில் மண்,பிளாஸ்டிக் கழிவுகள்,கற்கள் அடைக்கப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக தூர்வார பொதுமக்கள் தாங்களே ஈடுபட வேண்டும்.

நகராட்சி பஞ்சாயத்து போன்ற பொறுப்பாளர்களுக்கு விவரம் அறிவிப்பது அவசியம்.மரங்கள் அடியில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க மக்களுக்கு அதன் பதிப்புகளை எடுத்து சொல்வது அவசியம்.மரங்களுக்கு அடியில் நிற்பது தவிர்ப்பது அவசியம். மின் கம்பிகள் அருந்து விழுந்திருக்கும் பொழுது அதனை அப்புறபடுத்த முற்படாமல் மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மேலும் வீட்டில் குளிர் காய்வதற்கு சிகிரியில் அடுப்புக்கரி, விறகு போன்றவை நெருப்பு பற்ற வைக்கும் பொழுது அறைக்குள் கார்பன் அளவு அதிகரித்து,ஆக்சிஜன் குறையும்போது உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமையும். அதனால் குளிர் காயும் போது வெளிப்புறங்களில் அல்லது கதவு ஜன்னல் திறந்து வைத்து கார்பன் புகை வெளியில் போனதை உறுதி செய்த பின்பு உறங்குவது அவசியம், என்றார்.

மேலும், தென்மேற்கு பருவமழை,வடகிழக்கு பருவ மழை நீலகிரி மாவட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்படும் நிலை இருப்பின், தகவல் பகிர்வது அவசியம், என குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் செய்திருந்தார்.

The post தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவர்களிடையே பருவ மழை குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : National Green Force ,Ooty ,Nilgiris ,St. Joseph's High School ,Ooty. School ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்