×

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமை சசிகலாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் ஆதரவு: பைபிள் கதையை சொல்லி சூசகமாக பேசியதால் அதிமுகவில் பரபரப்பு

சென்னை:  சென்னை, சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஒரு சிறிய பைபிள் கதை கூறுகிறேன். ஒரு பணக்காரனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் உழைப்பாளி. மற்றொருவனோ, ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்கு உரிய பங்கை தந்தை பிரித்து கொடுத்து விடுகிறார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒரு முறை அந்த ஊரில் பஞ்சம் ஏற்பட, எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்துக்கு ஊருக்கு பிழைப்புக்கு சென்றான். அங்குள்ள விவசாயி ஒருவரிடம் பன்றி மேய்க்கும் வேலையை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிடுவதற்கு ஒன்றும் கொடுக்கவில்லை. பசி தாங்காமல் பன்றிக்கு வைக்கும் தவிட்டை தின்றான். தன் தந்தையின் சொல்லை கேட்காமல் இப்படி அவஸ்தை படுகிறோமே என்று வருத்தப்பட்டான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என்று ஊர் திரும்பினான். அவர் மகன், மனம் திருந்தி வந்ததால் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். இது அவனோடு பிறந்த மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான். இந்த கதையை சொன்ன இயேசு சொல்கிறார், நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திரும்ப செய்யவே நான் வந்திருக்கிறேன் என்றார். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும் என்று இயேசுபிரான் சொல்லி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில்தான் ஓபிஎஸ் இந்த கதையை கூறியிருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மதுரையில்  ஓபிஎஸ் பேசும்போது, ‘‘சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து  கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’’ என்று முன்பு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘சசிகலாவை கட்சியில்  சேர்க்க கூடாது என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு இதுபற்றி பேசுவதில் எந்த பயனும்  இல்லை’’ என்றார். இந்த நிலையில்தான் மீண்டும் சசிகலாவை சேர்க்கும் வகையில் ஓபிஎஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.* கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்கள்விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில் கல்வியும், நவீன மருத்துவத்தையும் அறிமுகப்படுத்திய கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு அதிமுக என்றென்றும் உறுதுணையாக இருக்கும். அதிமுகவில் ஜாதி, மதம் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவி வருகிறோம். ஜெயலலிதா, கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தார். கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக வருவார்கள் என்று எல்லோராலும் பாராட்டப்படுகின்ற நிலை உள்ளது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.* சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாதுஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்க வேண்டாம். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும். சசிகலாவுக்கு பொருந்தாது. மனித குலம் தோன்றியது முதல் தவறு செய்வது இயல்பு. ஆனால் திருந்தி வாழ்வது மனித குலத்தின் சிறப்பு. ஆனால், சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் உறுதியாக இருக்கிறார்.சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை சொல்லவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று கூறினார். ஏற்கனவே, ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக பேசியபோதும், ஜெயக்குமார்கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமை சசிகலாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் ஆதரவு: பைபிள் கதையை சொல்லி சூசகமாக பேசியதால் அதிமுகவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Chennai ,Christmas ,Chennai, ,Chettepatti ,Panneisselvam ,Dinakaran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...